வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை காவேரி காலமானார்

571

வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனையான ஆர்.காவேரி, உடல்நலக்குறைவால் நேற்று (15) காலமானார்.

கடந்த 3 ஆண்டுகளாக aplastic anemia என்ற குறைப்பிறப்பு இரத்த சோகை நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள இந்தியாவுக்குச் சென்று கடந்த ஐந்து மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை (15) இந்தியாவின் பெங்களூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் காவேரி உயிரிழந்தாக அவரது ஆரம்பகால பயிற்சியாளரான சுபாஸ்கரன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

>>இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் தலைவர் மரணம்

யாழ்ப்பாணம், அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவியான ஆர்.காவேரி, சுவட்டு நிகழ்ச்சியைப் போல, மைதான நிகழ்ச்சிகளும் திறமைகளை வெளிப்படுத்தியவர்.

ஆரம்ப காலத்தில் மரதன் உள்ளிட்ட குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகள், ஹொக்கி, வலைப்பந்து, கரப்பந்து, எல்லே என தேசிய அளவிலான பல போட்டிகளில் பிரகாசித்து வட மாகாணத்துக்கு பெருமை சேர்த்த அவர், பிற்காலத்தில் அந்தக் கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்சியாளராகக் கடமையாற்றிய சுபாஸ்கரனின் முயற்சியால் கோலூன்றிப் பாய்தல் விளையாட்டில் அவதானம் செலுத்தினார்.

இதனால் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், தேசிய விளையாட்டு விழா, முப்படைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் உள்ளிட்ட தேசிய ரீதியில் நடைபெற்ற அனைத்துவகையான போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டார்.

குறிப்பாக, 2015-2017 காலப்பகுதியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையும், முன்னாள் கோலூன்றிப் பாய்தல் தேசிய சம்பியனுமான அனித்தா ஜெகதீஸ்வரனுக்குப் பலத்த போட்டியைக் கொடுத்து வந்த வீராங்கனையாகவும் அவர் திகழ்ந்தார்.

ஏவ்வாறாயினும், அனித்தாவின் வருகைக்கு முன் கோலூன்றிப் பாய்தலில் முன்னணி வீராங்கனையாக இலங்கையில் உள்ள அனைவராலும் அறியப்பட்ட காவேரி, இலங்கை கடற்படையில் இணைந்துகொண்டு சிறிதுகாலம் விளையாட்டில் ஈடுபட்டார்.

எனினும், திருமணத்திற்குப் பிறகு இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறிய அவர், மெய்வல்லுனர் விளையாட்டுக்கும் விடைகொடுத்தார்.

இதனிடையே, முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விளையாட்டுப் பயிற்சியாளர் பதவிக்கு காவேரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அந்தக்காலப்பகுதியில் தான் அவர் தீடீரென நோய்வாய்ப்பட்டார். இதன்போது அவருக்கு புற்றுநோய் வகையைச் சேர்ந்த குறைப்பிறப்பு இரத்த சோகை (aplastic anemia) நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே அவர் மேலதிக சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, வடக்கின் மெய்வல்லுனர் விளையாட்டில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக கொடிகட்டிப் பறந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஆர்.காவேரியின் மரணம் வடக்கிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

அவரது ஆத்மா சாந்தியடைய இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக பிரார்த்தனை செய்கிறோம்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<