தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக ஸ்டேன்டட் சைக்கிளோட்டப் போட்டிகளின் சம்பியன் பட்டத்தை வட மாகாணமும், இரண்டாவது இடத்தை கிழக்கு மாகாணமும் பெற்றுக்கொண்டது.
இதில் பெண்களுக்கான ஸ்டேன்டட் மற்றும் ரேஸிங் சைக்கிளோட்டப் போட்டிகளில் இரண்டாவது இடங்களை முறையே வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, நீண்ட இடைவெளியின் பிறகு தேசிய விளையாட்டு விழா சைக்கிளோட்டப் போட்டிகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவு வீரர்கள் பங்குபற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற தாய்லாந்து பயணமாகும் 8 இலங்கையர்
விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஸ்டேன்டட் மற்றும் ரேஸிங் சைக்கிளோட்டப் போட்டிகள் புத்தளம் நகரில் நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது.
129 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான ரேஸிங் சைக்கிளோட்டப் போட்டியில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த தர்ஷன பிரசாத் தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 3 மணித்தியாலங்கள் 14.17 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், தென் மாகாணத்தைச் சேர்ந்த எல்.டி நயனப்ரிய (3மணி. 15நிமி. 55செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெத்தும் சம்பத் (3மணி. 16நிமி. 40செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், 52 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி விறுவிறுப்புக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் முதலிரண்டு இடங்களையும் மேல் மாகாணத்தின் பீ. சுலோச்சனா மற்றும் கிழக்கு மாகாணத்தின் மனோமி குமாரி ஆகியோர் ஒரே நேரத்தில் (ஒரு மணித்தியாலம் 39நிமி. 42செக்.) போட்டியை நிறைவு செய்தாலும், சலன அசைவு நுட்ப உதவியுடன் சுலோச்சனாவுக்கு வெற்றியை வழங்க போட்டி நடுவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இப்போட்டியில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த தினேஷா டில்ருக்ஷி (ஒரு மணி. 48நிமி. 02செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, ஆண்களுக்கான ஸ்டேன்டட் சைக்கிளோட்டப் போட்டியில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த சிசிர குமார தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 3 மணித்தியாலங்கள் 36நிமி. 18 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், மேல் மாகாணத்தைச் சேர்ந்த வசந்த ஹரிச்சந்திர (3மணி. 36நிமி. 18செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த டபிள்யூ. எம்.எஸ் விதானகே (3மணி. 36நிமி. 18செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான ஸ்டேன்டட் சைக்கிளோட்டப் போட்டியில் முதலிடத்தை மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏ.என் மதுரங்கி பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலங்கள் 52.25 செக்கன்களில் நிறைவு செய்தார்.
அத்துடன், வட மாகாணத்தைச் சேர்ந்த பி. தனுசுஜாந்தினி (ஒரு மணி. 52நிமி. 25செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், கிழக்கும் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். வீரசிங்க (ஒரு மணி. 52நிமி. 25செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றம் சான்றிதழ்களுடன், பணப்பரிசில்களும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<