தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தமிழ் பேசும் வீரர்கள் சாதனை

33rd National Youth Sports Festival - 2021

384
Athletics

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று (22) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கம்பஹா மாவட்டம் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

102 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு மாவட்டம் 2ஆவது இடத்தையும், 93 புள்ளிகளைப் பெற்ற கண்டி மாவட்டம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் மலையக வீரர்கள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகிய 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து 26 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3000 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

20 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டிகளின் முடிவில் 10 புதிய போட்டிச் சாதனைகள் முறிடிக்கப்பட்டன.

அத்துடன், இம்முறை போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திஜ்ஜ கௌஷல்ய டயஸும், சிறந்த வீராங்கனையாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சயுரி லக்ஷாமா மெண்டிஸும் தெரிவாகினர்.

அதேபோல, 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக நீளம் பாய்தலில் போட்டி சாதனை நிகழ்த்திய கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த யசிந்து ஹேரத்தும், சிறந்த வீராங்கனையாக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌஷல்யா மதுஷானியும் தெரிவுசெய்யட்டனர்.

இந்த நிலையில், இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒட்டுமொத்தமாக 8 பதக்கங்களை வென்று அசத்தினர்.

யாழ். மாவட்டத்திற்கு 3 பதக்கங்கள்

33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் யாழ் மாவட்டம் சார்பாக பங்குகொண்ட சுசேந்திரகுமார் மிதுன்ராஜ், சிவகுமார் பிரகாஷ்ராஜ் மற்றும் பிரேம்குமார் மிதுசன் ஆகியோர் பதக்கங்களை சுவீகரித்தனர்.

இதில் போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் யாழ். மாவட்டம் சார்பாக பங்குகொண்ட சுசேந்திரகுமார் மிதுன்ராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டியில் அவர் 14.61 மீட்டர் தூரத்திற்கு குண்டினை எறிந்து, 2016ஆண்டு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம். மதுஷங்க நிலைநாட்டிய (14.50 மீட்டர்) போட்டி சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன்ராஜ் முறிடியத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, 20 வயதுக்கு மேற்ட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். வீரர் சிவகுமார் பிரகாஷராஜ்;, 43.01 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன், 2012இல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டி.சதுரங்க (42.60 மீட்டர்) நிகழ்த்திய போட்டி சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை காவேரி காலமானார்

இந்த இரண்டு வீரர்களும் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் பயிற்சியாளர் வடிவேஸ்வரன் ஹரிகரனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். வீரர் பிரேம்குமார் மிதுசன் வெள்ளிப்பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 37.89 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

இதனிடையே, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் ஜொலித்து வருகின்ற யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியான சி. ஹெரினா, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.45 மீட்டர் உயரத்தைத் தாவி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கிழக்கிற்கு ஐந்து பதக்கங்கள்

33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு லிழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை அவர் ஒரு நிமிடமும் 55.59 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இதனிடையே, ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட நிப்ராஸ், போட்டியை 3 நிமிடங்களும் 56.17 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு – களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகம் சார்பில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட தியாகராசா டிலுஜன், 1.98 மீட்டர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேபோல, களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகத்தின் சார்பில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பு.ரக்சனா 5ஆவது இடத்தையும், அதே வயதுப் பிரிவில் உயரம் பாய்தலில் 1.52 மீட்டர் உயரம் பாய்ந்து வா.தனுஸ்கா 4ஆவது இடத்தையும் பெற்று ஆறுதல் அடைந்தனர்.

மேலும், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.புகழரசன் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆசிய இளையோர் தகுதிகாண் போட்டியில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

இந்த நிலையில், போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திருகோணமலை மாவட்டம் சார்பாக பங்குகொண்ட கே.தேவமதுமிதன், 13.12 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதுஇவ்வாறிருக்க, 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள் 20.79 செக்கன்களில் நிறைவு செய்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. கணேஷன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

மேலும், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 2 மீட்டர் ஓட்டப் போட்டியை 22.68 செக்கன்களில் நிறைவு செய்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதுமாத்திரமின்றி, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஹஸ்னா மிராஸாதீன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 35.23 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க