டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்கேற்பு?

Tokyo Olympics - 2021

275

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. 

குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன் முதலாவது இலங்கையராக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற கடந்த மாதம் 20ஆம் திகதி தகுதிபெற்றிருந்தார்.

சர்வதேச குதிரைச் சவாரி சம்மேளனத்துக்கு (FEI) எதிராக சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள விளையாட்டுத்துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் மெதில்டா கார்ல்சனும் இலங்கை குதிரையேற்ற சங்கத்தினரும் வெற்றிபெற்றனர்.

சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

இதனையடுத்து, தனிப்பட்ட கோட்டா அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு முதலாவது இலங்கையராக மெதில்டா கார்ல்சன் தகுதிபெற்றுக்கொண்டார்

இதனிடையே, 18 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி இரண்டாவது இலங்கையராக ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை உறுதி செய்தார்.

இவர் வைல்ட் கார்ட் முறையில் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது.

இதன்படி, ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ளும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த இலங்கையின் மில்கா கிஹானி

இந்த நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை டெஹானி எகொடவெல பெற்றுக்கொண்டார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவார். நாயகன்த நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடத்தின் பழைய மாணவியான டெஹானி, தற்போது இலங்கை கடற்படையில் பணிபுரிந்து வருகின்றார்.

இவர்களுடன் இதுவரை இலங்கை சார்பாக மேலும் நான்கு போட்டியாளர்கள் மாத்திரமே ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளதாக ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க, நீச்சல் வீராங்கனை அனிக்காஹ் கபூர் ஆகியோரே ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள மற்றைய இரண்டு இலங்கையர் ஆவர்.

இவர்கள் இருவரும் வைல்ட் கார்ட் முறையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கைள விட ஜூடோ வீரரான சாமர நுவன் தர்மவர்தன, பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன ஆகிய இருவருக்கும் வைல்ட் கார்ட் முறையில் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் சில தினங்கள் பொறுத்திருக்க வேண்டி வரும் எனவும் தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, மெய்வல்லுனர்களில் நிலானி ரத்நாயக்க ஒலிம்பிக அடைவு மட்டத்தை எட்டியுள்ளபோதிலும், அவர் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை

மறுபுறத்தில் மல்யுத்தம் மற்றும் பளுதூக்கல் வீரரொருவருக்கும் வைல்ட் கார்ட் முறையில் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய ஒலிம்பிக் குழு முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், தேசிய ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக 8 வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், ஜுன் 29ஆம் திகதி தான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாளாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

எனவே, எதிர்வரும் நாட்களில் இன்னும் சில இலங்கை வீரர்களுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்கும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…