இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தது. இந்தத் தொடரை ஜூலை 25, 27 மற்றும் 29 ஆகிய தினங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலின் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இலங்கையுடனான ஒருநாள் தொடரை இரத்து செய்வதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
நாட்டின் சகல விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண………
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டுதான் இந்த தீர்மானத்துக்கு வந்தோம். அதுதவிர இந்த தொடரை இரத்து செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் பங்களாதேஷ் மாத்திரமல்ல எந்தவொரு சர்வதேச அணியும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட முன்வரமாட்டாது என தான் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பில் அவரது இல்லத்தில் நேற்றுமுன்தினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கவலைப்படுகிறோம். இந்த சூழ்நிலையில் பங்களாதேஷ் மாத்திரமல்ல, எந்தவொரு சர்வதேச அணியும் அங்கு சென்று விளையாடுவதற்கு முன்வரமாட்டாது. அதுமாத்திரமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கவனத்தில் எடுக்காமல் பங்களாதேஷ் அணியை அங்கு அனுப்புவதென்பது சாத்தியமில்லை. அதேபோல, குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபை, பாதுகாப்பு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பிறகுதான் நாங்கள் இந்த தீர்மானத்துக்கு வந்தோம்” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த தொடரை நடத்துவது குறித்து எமது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகுதான் எமது அணியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் தீர்மானிப்போம். எதுஎவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் இளையோர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் …….
முன்னதாக, குறித்த தொடரை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டிகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவிருந்ததால் அதை ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு இருநாட்டு அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பங்களாதேஷ் ஏ கிரிக்கெட் அணியும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வினளயாடவிருந்தது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலொன்றைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கான பங்களாதேஷ் அணியின் சுற்றுப்பயணம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருந்த இலங்கைக்கான பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் சுற்றுப்பயணமானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<