தனது முதுகு உபாதைக்கான சத்திரசிகிச்சை ஒன்றை செய்யத் தவறியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஹஸன் அலி, தனது உபாதைக்காக இன்னும் 5 வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஸன் அலி உபாதைக்கான சத்திரசிகிச்சையினை செய்யாத நிலையில், இணையவழி தொடர்பாடல் மூலம் தனது உபாதைக்கான ஆலோசனைகளை பெற்று உபாதையில் இருந்து குணமாக முயற்சி செய்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) உறுதி கூறியிருக்கின்றது.
>>பாகிஸ்தானின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனூஸ் கான்<<
ஹஸன் அலி தனது முதுகு உபாதைக்கான சத்திர சிகிச்சையினை செய்ய அவுஸ்திரேலியா பயணமாக இருந்தார். எனினும், உலகில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச போக்குவரத்து தடைப்பட, ஹஸன் அலிக்கு அவுஸ்திரேலியா செல்ல முடியாத ஒரு நிலை உருவாகியது. இந்த நிலையிலேயே, ஹஸன் அலி தற்போது இணையவழி ஆலோசனைகளை தனது உபாதைக்காக பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், அடுத்த ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஹஸன் அலியின் முதுகு உபாதை தொடர்பிலான ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொடர்ந்தும் சத்திரசிகிச்சை தேவையா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
”ஹசன் அலிக்கு ஓரே இடத்தில் ஒரு வருடத்திற்குள் இரண்டு தடவைகள் உபாதை ஏற்பட்டிருக்கின்றது. இது உண்மையில் நல்ல விடயம் கிடையாது.” எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மருத்துவ அதிகாரி Dr. சொஹைல் சலீம், ஹசன் அலி இணையவழி ஆலோசனைகளுக்கு அமைவாக சிறப்பாக செயற்படுவதாக தெரிவித்தார்.
25 வயது நிரம்பிய ஹஸன் அலி, லாஹூரில் கடந்த பருவகாலத்திற்காக இடம்பெற்ற பாகிஸ்தானின் முதல்தர கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக முதுகு உபாதைக்கு ஆளாகியிருந்தார். பின்னர், கிட்டத்தட்ட 7 வாரங்கள் ஓய்வினை எடுத்துக் கொண்ட அவர், கடந்த நவம்பர் மாதம் மீண்டும் முதுகு உபாதைக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால், மீண்டும் 6 வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்ட அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழந்திருந்ததோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் தமது வீரர்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தினையும் பெறத் தவறியிருந்தார்.
இந்த உபாதைகளுக்குப் பின்னர் ஹஸன் அலி, இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் சில போட்டிகளில் ஆடிய நிலையில், குறித்த போட்டிகளில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தினை ஹஸன் அலி பெறாத போதும், அவரின் உபாதை குணமாகும் வரை அவருக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கவுள்ளது. இன்னும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வீரர்கள் நலத்திட்டத்தில் இருந்தும் ஹஸன் அலிக்கு இந்த உபாதைக்காக மேலதிக உதவிகள் கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<