செல்பி, ஆட்டோகிராப் வழங்க மறுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

159

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை வீரர்களுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர். 

எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த டெஸ்ட் தொடருக்காக கடந்த வாரம் இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், இலங்கையில் எந்த கிரிக்கெட் வீரர் உடனும் கைகுலுக்கல் நடவடிக்கைகளில் (Hand Shake) ஈடுபட்டமாட்டார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

உலகம் பூராகவும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கைகுலுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸின் உக்கிரம் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தற்போது இலங்கையில் கிரிக்கெட் இரசிகர்களுடன் செல்பி (Selfie) எடுத்துக் கொள்வதை தவிர்த்திருப்பதோடு, கையொப்பம் வழங்குவதனையும் (Autograph) தவிர்க்கவிருக்கின்றனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் செல்பி, கையொப்பமிடுதல் போன்றவற்றை தவிர்த்து உடல்நிலை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவதானமாக இருக்கவிருக்கும் விடயத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடக பேச்சாளர் ஒருவர் உறுதி செய்திருந்தார். 

அதேநேரம் குறித்த ஊடகப் பேச்சாளர் இலங்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் உடல்நிலை தொடர்பாக அவதானமாக இருக்க இன்னும் மேலதிக பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

உலகம் பூராக மிகவும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 120,794 இற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 4,365 வரையிலான உயிரிழப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

குறிப்பாக இலங்கையிலும் தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<