இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியது.
ஆனால், அப்படி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் இலங்கையில் ஐ.பி.எல் நடத்துவது பற்றி இப்போது விவாதிப்பதில் அர்த்தமே இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவலால், இலங்கை அழைப்பு விடுத்ததாக கூறப்பட்ட செய்தி குறித்து சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
IPL தொடர் இலங்கையில் நடத்தப்படுமா?
கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரினை, இலங்கையில் நடத்துவதற்கு…
இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடர் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரை, இந்தியாவில் எதிர்வரும் மே 3ஆம் திகதி வரை ஊடரங்கு அமுல் நீடிக்கப்பட்டதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
தற்போதைய அசாதாரண சூழல் சீரானதும் செப்டம்பர்– ஒக்டோபர் அல்லது ஒக்டோபர்–நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தும் யோசனையில் BCCI உள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் வருவதால் இந்த பருவத்திற்கான ஐ.பி.எல். போட்டி நடப்பது சந்தேகம் தான்.
இதற்கிடையே, பிசிசிஐ சிக்கலில் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, “கடந்த சில தினங்களுக்கு முன் லங்காதீப சிங்கள நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், இலங்கையில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியும். இங்கு கொரோனா தொற்று அபாயம் குறைவாக உள்ளது. விரைவில் நிலைமை சீராகிவிடும்.
அத்துடன், இலங்கை வரும் வீரர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துகொடுக்க தயாராக உள்ளோம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும்.
மேலும், இந்திய இரசிகர்கள் தொலைக்காட்சியின் ஊடாக ஐ.பி.எல் தொடரை கண்டுகளிக்கலாம். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் இந்தத் தொடர் நடத்தப்பட்டது. எனவே பிசிசிஐ இன் முடிவுக்காக காத்திருக்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், அப்படி எந்த அழைப்பும் வரவில்லை என பிசிசிஐ இன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனவே, அது பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முடங்கி இருக்கும் போது இதைப் பற்றி சொல்லும் நிலையில் பிசிசிஐ இல்லை என்றும் அவர் விளக்கி இருக்கிறார்.
இந்த தகவலால் இலங்கை அழைப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.
விரைவில் அங்கே கொரோனா வைரஸ் பாதிப்பு முழு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை வைத்து தான் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<