2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதோடு மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ண வெற்றியாளர்களாகவும் மாறியது.
>>டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட நிறைவை ஒட்டி விஷேட பகலிரவு டெஸ்ட்<<
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமை கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) அதிகாரிகள், வெற்றி பெற்ற அணியினை கௌரவிக்கும் இறுதி நிகழ்வில் (Final Presentation) அனுமதிக்கப்படாத சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் கோரியுள்ளது.
குறிப்பிட்ட நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அவரின் உடல்நிலை காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு விடயங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி (Chief Operating Officer) சுமைர் அஹ்மட் பாகிஸ்தானை பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் சுமைர் குறிப்பிட்ட நிகழ்விற்காக அழைக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வில் ஐ.சி.சி. இன் தலைவர் ஜெய் ஷாஹ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் தேவரஜித் சாய்க்கியா மற்றும்
நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் (NZC Director) ரோஜர் வோஸ் ஆகிய நான்கு பேர் மாத்திரமே கலந்து கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது,
குறிப்பாக இந்த நிகழ்வில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான தேவரஜித் சாய்க்கியா ஏன் அழைக்கப்பட்டார் என்பதில் கேள்விகள் எழுப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தானின் பிரதிநிதியாக எதிர்பார்க்கப்பட்ட சுகவீனமுற்ற மொஹ்சின் நக்வியின் பிரதியீடாக யாரை அழைப்பது தொடர்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி. முறையாக தொடர்பு கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் ESPNCricinfo செய்திச் சேவையும் ஐ.சி.சி இடம் விளக்கம் கோரியிருப்பதாக கூறப்படுகின்றது.
சுமார் 29 வருட இடைவெளியின் பின்னர் ஐ.சி.சி. இன் தொடர் ஒன்றினை நடாத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்திய – பாகிஸ்தான் அரசியல் குளறுபடிகள் காரணமாக இந்தியா தொடரினை நடாத்தும் பாகிஸ்தானுக்கு வர மறுத்ததோடு, இதன் காரணமாக தொடரின் இறுதி, அரையிறுதிப் போட்டி ஒன்றுடன் இந்திய அணி ஆடிய அனைத்துப் போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டன.
மறுமுனையில் தொடர் நடைபெறும் போது இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மோதலின் முன்னர் தேசிய கீதங்கள் ஒலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவிற்குப் பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக ஒலிக்கப்பட்டதோடு, இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல் நேரடி ஒளிபரப்பின் போது தொடரினை நடாத்தும் உரிமம் கொண்ட பாகிஸ்தானின் பெயர் சம்பியன்ஸ் கிண்ண இலட்சினையில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<