இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பிரதானி ஒருவரினால் ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் மேற்கொள்ளவிருந்த மோசடி தொடர்பிலான அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் விசாரணைகளை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி தெரிவித்தார்.
இதேவேளை, விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் குறித்த நிதி மோசடியில் ஈடுபடுவதற்கு தயாராகிய இலங்கை கிரிக்கெட்டின் நிதிப் பிரிவு பிரதானிக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது அத்தியாயம், இன்று சனிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஆறு அணிகள்…
ஏதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான பணத்தை போலி மின்னஞ்சல்களை அனுப்பி நிதிப் பிரிவின் பிரதானி ஒருவர் வெளிநாடொன்றிலுள்ள தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஒன்றிற்கு மாற்றுவதற்கான முயற்சியினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் தடுத்து நிறுத்தியது.
இதனையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவினால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டினை பரிசீலனை செய்த பொலிஸ் மாஅதிபர், விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட ஊடகவியலாளர் சந்திபொன்றை நேற்று (13) நடத்தியிருந்தது.
இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜெரோம் ஜெயரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளர் நதீஷான் சூரியாரச்சிகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கருத்து வெளியிடுகையில், ”இந்த சம்பவத்தில் எதையும் மறைக்கவோ, யாரையும் காப்பாற்றவோ எவ்வித தேவையும் எமக்கு இல்லை. அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையாகவும், நியாயமாகவும் முன்னெடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நிதிப் பிரிவு பிரதானியை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவும், இலங்கை கிரிக்கெட்டும் பிரத்தியேகமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. நாங்கள் வெளிப்படையாக நடந்துகொண்ட காரணத்தால் தான் இவ்வாறான பாரிய மோசடியொன்றை தடுத்து நிறுத்த முடிந்தது. எனவே, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக மிக விரைவில் இந்த விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக” அவர் தெரிவித்தார்.
ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்?
கிரிக்கெட் இரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளாக்கியிருக்கும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது அத்தியாயம் நாளை (15) ஐக்கிய…
”இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பிரதானியின் மின்னஞ்சல் முகவரி ஊடாக இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த உடனே அவரை பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த நபரை ஒரு வருடத்துக்கு முன் நாங்கள் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைத்துக் கொண்டோம். அவரை நேர்முகத் தேர்வின் மூலம் குறித்த பதவிக்கு நியமித்தோம். இதற்கு முன் அவர் தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை. ஆனாலும், இந்த நிதி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை முன்னெடுக்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.
”இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் மூன்று தவணைகளாக எமக்கு பணம் கிடைக்கும். இதில் 50 சதவீத பணம் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் கிடைக்கும். எஞ்சிய பணம், 25 சதவீதமாக இரு தவணைகளாக கிடைக்கப் பெறும். இதுதொடர்பிலான பற்றுச்சீட்டுக்களை எமது நிதிப் பிரிவு தயாரிக்கும். ஆனால் எமது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியான மின்னஞ்சல் மூலம் இந்த நிதி மோசடியை செய்துள்ளார்கள்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த நிதிப் பரிமாற்றத்துக்காக ஹெக் (Hack) செய்யப்பட்டு மின்னஞ்சல் அனுப்பப்படவில்லை எனவும், இங்குள்ள கணனிகளைப் பயன்படுத்தியே இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளர் நதீஷான் சூரியாரச்சிகே தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<