ரங்கன ஹேரத்தின் நியமனத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ்

226

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத்தை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன  

பதவிக்காலம் மற்றும் சம்பள விடயங்கள் குறித்து இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சுமுகமான முடிவொன்றை எட்டமுடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் நாளொன்றுக்கு 1500 அமெரிக்க டொலர்களை சம்பளமாக வழங்குமாறு ரங்கன ஹேரத் கோரியுள்ளார்.

பங்களாதேஷ் அணியுடன் இணையும் ரங்கன ஹேரத்!

அதேபோல, ஒரு பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்திடம் அனுபவம் இல்லாத காரணத்தினாலும், வெறும் 120 நாட்களுக்கு மாத்திரம் அந்த அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட முடியும் என்ற கோரிக்கையையும் ஹேரத் முள்வைத்துள்ள காரணத்தினாலும் அவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கான முயற்சியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் தமது அணியுடன் நீண்டகாலம் சேவையாற்றக் கூடிய ஒரு சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர் தான் தேவை என்பதை அந்நாட்டு கிரிக்கெட் சபையின் செயல்பாட்டு அதிகாரி அக்ரம் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உண்மையில் ரங்கன ஹேரத்தை எமது அணியுடன் இணைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டாது. அவர் ஒரு தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர். ஆனால் பயிற்சியாளராக அவரிடம் அனுபவம் இல்லை

120 நாட்களுக்கு மாத்திரம் பணியாற்றுகின்ற ஒரு பயிற்சியாளரை நாங்கள் தேடவில்லை. எமது அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒரு நீண்டகால சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளரை தான் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்

இதேவேளை, ரங்கன ஹேரத் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் சஹீட் அஜ்மால் மற்றும் இந்தியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சுராஜ் பஹாதுலே ஆகிய இருவரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<