மாத்தறை சிட்டி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பகீர் அலி

382

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் நிஸாம் பக்கீர் அலியை, மாத்தறை சிட்டி கழகம் தங்களுடைய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

மாத்தறை சிட்டி கழகத்துக்கு பயிற்றுவித்த இந்திக தெனுவர, ஏ.ஜி. வீரபுலி மற்றும் கே.டி. லலித் ஆகியோருடன் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விஷேட நேர்காணலின் போது, பகீர் அலியின் நியமனம் குறித்து கருத்து வெளியிட்டார். பகீர் அலியின் ஒப்பந்தம் எதிர்வரும் FFSL தலைவர் கிண்ணத்துடன் ஆரம்பிக்கவுள்ளதுடன், டயலொக் சம்பியன்ஸ் லீக் பருவகாலம் மற்றும் அதற்கு அடுத்த தொடர்களிலும் இவரது ஒப்பந்தம் நீடிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

20 அணிகளுடன் இடம்பெறும் FFSL தலைவர் கிண்ணம்

“நிஸாம் பகீர் அலி நாட்டில் உள்ள மிக அதிக அனுபவம் உள்ள ஒரு பயிற்றுவிப்பாளர். நாம், ஏற்கனவே அணியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என எண்ணியிருந்தோம். அந்த மாற்றத்தின் வரிசையில், பகீர் அலியின் அனுபவத்திலிருந்து அதிக விடயங்களை வீரர்கள் பெற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

இப்போதைய நிலையில் பகீர் அலியின் இந்த நியமனம் அடுத்து நடைபெறவுள்ள FFSL தலைவர் கிண்ணத்தை குறிவைத்து நடைபெறுகிறது. ஆனால், அவரிடமிருந்து உடனடியாக சம்பியன்ஷிப்பை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், நாம் முன்னேற வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. அதேநேரம், அடுத்துவரும் டயலொக் சம்பியன்ஷிப் தொடரிலும் இவரை தலைமை பயிற்றுவிப்பாளராக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே, இந்த தொடர் முடிவடைந்ததும், அது தொடர்பான கலந்துரையாடல்களை அவருடன் மேற்கொள்வோம்”

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக பகீர் அலி 2 ஆண்டுகள் பணிபுரிந்ததுடன், இலங்கை அணி சர்வதேச தரவரிசையில் 198 ஆவது இடத்திலிருந்து 205 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் 24 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்ததுடன், 5 போட்டிகளை சமநிலை செய்திருந்தது. அதேநேரம், குறித்த இந்த காலப்பகுதியில் 64 கோல்களை விட்டுக்கொடுத்த இலங்கை அணி, 7 கோல்களை மாத்திரமே அடித்திருந்தது.

ஆனாலும், பகீர் அலி ஆரம்பத்தில் பயிற்றுவித்த பொலிஸ் விளையாட்டுக் கழகம், ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகள் டிவிஷன் ஒன்றிலிருந்து டயலொக் சம்பியன்ஸ் லீக்கிற்கு தரம் உயர்த்தப்பட்டிருந்தன. எனவே, பகீர் அலி மேலும் சில திறமை மிக்க வீரர்களை இலங்கை தேசிய அணி கண்டறிந்துகொள்ள உதவுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட பகீர் அலி, “அடுத்து நடைபெறவுள்ள FFSL தலைவர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வீரர்களை முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல முடியும் என நம்புகிறேன். இரண்டு நாட்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கியதில், இளம் மற்றும் திறமையான வீரர்கள் இருப்பதை பார்த்தேன்.

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட காலத்தில், வடக்கிலிருந்து திறமையான வீரர்களை தேசிய அணிக்கு அழைத்திருந்தேன். அதேபோன்று தெற்கிலும் பணிபுரிய எண்ணியுள்ளேன். இந்த பகுதியில் கால்பந்தின் மீதுள்ள ஆர்வம் சற்று குறைவடைந்திருப்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடிந்தது. எனவே, அதனை தடுத்து கால்பந்து மீதுள்ள ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<