நிரோஷன் திக்வெல்லவிற்கு அபராதம்

1908
Niroshan dickwella

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐ.சி.சி ஒழுக்க கோவையினை மீறியதன் காரணமாக இலங்கை விக்கெட் காப்பாளர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்லவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 30 சதவித அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேநேரம், துர்நடத்தைக்கான இரண்டு புள்ளிகளும் பதியப்பட்டன.

குறித்த சம்பவமானது, ஜிம்பாப்வே அணி துடுப்பாடிக்கொண்டிருந்த ஏழாவது ஓவரின் போது, அகில தனஞ்சய வீசிய பந்து துடுப்பாட்ட வீரர் சொலொமன் மிர்ரை தாண்டி விக்கெட்டுக்கு பின்னின்ற நிரோஷன் திக்வெல்லவை சென்றடைந்தது. அதனையடுத்து, சொலொமன் மிர் துடுப்பாட்டத்தை நிறைவு செய்த நிலையிலும், துடுப்பாட்ட கோட்டிலிருந்து வெளியேறும் வரை காத்திருந்து சூழ்ச்சியான முறையில் அவரை ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்ததன் காரணமாகவே இந்த அபாரம் விதிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க

மைதான நடுவர்களான இயன் கோல்ட் மற்றும் ருசிர பள்ளியகுருகே ஆகியோர் ஆட்டமிழப்பை உறுதி செய்து கொல்வதற்காக மூன்றாம் நடுவரிடம் மறுபரிசீலனைக்காக வேண்டுகோள் விடுத்தபோதே நிரோஷன் திக்வெல்ல ஐ.சி.சி ஒழுக்க கோவையை மீறியுள்ளமை தெரியவந்தது.

குறித்த குற்ற சாட்டை நிரோஷன் திக்வெல்ல ஒத்துக்கொண்டு, ஐ.சி.சி இன் உயரிய நடுவர் குழாமை சேர்ந்த போட்டி நடுவரான கிரிஸ் போர்ட் விதித்த அபராத தொகையையும் ஏற்றுக்கொண்டதால் மேலதிக விசாரணைகளுக்கு அவசியமில்லை என ஐ.சி.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.       

ஏற்கனவே, கடந்த பெப்ரவரி மாதம், ஐ.சி.சி இன் ஒழுக்க கோவையினை மீறியதன் காரணமாக, துர்நடத்தைக்கான ஐந்து புள்ளிகளைப் பெற்று, நிரோஷன் திக்வெல்ல இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து தடைவிதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தப் போட்டியிலும் துர்நடத்தைக்கான மேலும் இரண்டு புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் நிரோஷன் திக்வெல்ல, மொத்தமாக ஏழு புள்ளிகளை தற்போது பெற்றுள்ளார். இன்னும் 24 மாதங்களுக்குள் ஏதேனும் தவறுகள் மூலம் எட்டு புள்ளிகளை அல்லது அதற்கு மேல் எட்டும் பட்சத்தில் அவருக்கு 4 போட்டித் தடைப் புள்ளிகள் கிடைக்ககூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. நான்கு போட்டித் தடைப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிள் அல்லது 4 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அல்லது 4 டி20 போட்டிகள் என்ற நிலையில், அவர் அடுத்து எதிர்கொள்ளவுள்ள போட்டியை பொறுத்து போட்டித் தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.