ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற பெட்மின்டன் போட்டியில் “P” பிரிவில் பங்குபற்றிய இலங்கையை சேர்ந்த நிலுக்க கருணாரத்ன இவ்வருட ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறினாலும் தான் போட்டியில் பெறுமதி மிக்க வெற்றியைப் பதிவு செய்தார்.
அவர் தான் சந்தித்த கடைசிப் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த எட்ரியன் ஜீயோல்கோவை சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அவர் எட்ரியன் ஜீயோல்கோவை 2-0 என்ற ரீதியில் வெற்றி கொண்டார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் சுற்றுப் போட்டியில் 21-19 என்ற அடிப்படையில் நிலுக்க கருணாரத்ன வெற்றி கொண்டார். இரண்டாவது சுற்றில் இருவரும் வெற்றிக்காக போராடினாலும் நிலுக்க கருணாரத்னவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட போட்டியின் இறுதியில் 24-22 என்ற அடிப்படையில் நிலுக்க கருணாரத்ன வெற்றி கொண்டார்.
ஏற்கனவே நடைபெற்ற தனது முதல் போட்டியில் நிலுக்க கருணாரத்ன சீனாவை சேர்ந்த லோங் சென்னை எதிர்த்து ஆடினார். சீனாவை சேர்ந்த லோங் சென் 2-0 என்ற அடிப்படையில் நிலுக்க கருணாரத்னவை தோற்கடித்தார். அத்தோடு குவாத்தமாலாவைஹ்க் சேர்ந்த கெவின் கோடன் உடனான போட்டியில் கெவின் கோடன் போட்டியிலிருந்து வெளியேறி இருந்தமையால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
நிலுகாவிற்கு 129ஆவது இடம்
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிகளில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மரதன் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த நிலுகா கீதனி பங்குபற்றினார். இதில் அவருக்கு 129ஆவது இடம் கிடைத்தது. அவர் அந்தப் போட்டியை 3 மணித்தியாலம் 11 நிமிடங்கள் 05 வினாடிகலில் ஓடி முடித்து இருந்தார். நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மரதன் போட்டிகளில் மொத்தமாக 159 வீராங்கனைகள் பங்குபற்றி இருந்ததோடு அதில் 24 வீராங்கனைகள் போட்டியை முழுமையாக முடிக்கவில்லை.
பெண்களுக்கான மரதன் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றவர் கென்யாவைச் சேர்ந்த ஜெலகட் சுமோகோம் என்ற வீராங்கனை ஆவார். இவர் இந்தப் போட்டியை 2 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 04 வினாடிகலில் ஓடி முடித்து இருந்தார். அத்தோடு பெண்களுக்கான மரதன் போட்டிகளின் வெள்ளிப் பதக்கத்தை பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் வெண்கலப் பதக்கத்தை எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் வென்று இருந்தனர்.