இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரர்களில் ஒருவரான நிலூக கருணாரத்ன, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சர்வதே அரங்கில் வெல்வதற்கான உத்வேகத்தை வழங்கும் நோக்கில் ‘ஒலி நிலூக கருணாரத்ன அறக்கட்டளை’ (OLY Niluka Karunaratne Foundation) என்ற நலன்புரி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஒலிம்பிக் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோனுக்கு தனது முதல் நிதி உதவியை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வைத்து தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்த நிலூக கணாரத்ன, எதிர்காலத்தில் தனது அறக்கட்டளை மூலம் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற எந்தவொரு வீரருக்கும் உதவுவதற்கு தயார் என குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அறக்கட்டளையை உருவாக்குவது 2016 முதல் நான் கண்ட கனவு. சர்வதேச போட்டிகளில் பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றேன். எனது 22 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் எதிர்மறையான அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு உலகை வெல்ல உதவ வேண்டும் என்ற எண்ணம் அந்த அனுபவங்களால் வந்தது. நான் முதன்முதலில் யுபுன் அபேகோனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டொரிங்டன் மைதானத்தில் பார்த்தேன். அன்று முதன்முதலாக அவரைப் பார்த்தபோது, இந்த வீரருக்கு நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நாட்டின் விளையாட்டுத்துறையில் இருந்த உயர்மட்ட அதிகாரியிடம் யுபுன் தொடர்பில் சொன்னேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ஆனால் இறுதியில் யுபுன் இலங்கையின் விளையாட்டு வரலாற்றை மாற்றியது மட்டுமல்லாமல் தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் மாறினார். தேற்காசியாவிலேயே 100 மீற்றர் தூரத்தை 10 வினாடிகளுக்குள் ஓடிய ஒரே ஓட்ட வீரராக யுபுன் நம் நாட்டிற்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தார். அதன்படி எனது அறக்கட்டளை மூலம் அவருக்கு முதல் அடியை எடுத்து வைத்தேன். அதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என அவர் தெரிவித்தார்.
சுமார் 22 வருடங்களாக பெட்மிண்டன் களத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த 39 வயதான நிலூக கருணாரத்ன, லண்டன் 2012, ரியோ 2016 மற்றும் டோக்கியோ 2020 ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிஐருந்தார். அத்துடன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச பெட்மிண்டன் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
16 வயதில் தேசிய பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கையின் இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்த நிலூக கருணாரத்ன, தேசிய பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பை அதிக தடவைகள் வென்றவர் என்ற சாதனைக்குரியவராகவும் வலம் வருகின்றார்.
இந்த நிகழ்வில் ஒலி நிலூக கருணாரத்ன அறக்கட்டளையி;ன் உறுப்பினரும் நி;லூகவின் இளைய சகோதரரும், இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரருமான சாமிக்க கருணாரத்ன மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<