உலக மெய்வல்லுனரில் முதல் சுற்றுடன் வெளியேறினார் நிலானி

World Athletics Championship 2022

237

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் நிலானி ரத்நாயக, 13ஆவது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

நேற்று (16) இரவு நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்நாயக, போட்டித் தூரத்தை 9 நிமிடங்கள் 54.10 செக்கன்களில் நிறைவு செய்து 13ஆவது இடத்தைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் நோரா ஜெருடோ (கஸகஸ்தான்) 9.01.54 செக்., வெருகுவா கெடசிங் (எத்தியோப்பியா) 9.11.25 செக்., மர்வா பௌசயானி (டியூனிசியா), 9.12.14 செக்., ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றனர்.

உலக மெய்வல்லுனர் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் யுபுனுக்கு ஐந்தாமிடம்

இதேவேளை, 3 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் 42 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், ஒட்டுமொத்த நிலையில் நிலானி ரத்நாயக 39ஆவது இடத்தைப் பெற்றார்.

அதேபோல, ஆசிய நாட்டவர்களுக்கான ஒட்டுமொத்த நிலையில் 6ஆவது இடத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை சார்பில் போட்டியிடுகின்ற கடைசி வீராங்கனையான கயன்திகா அபேரட்ன, எதிர்வரும் 21ஆம் திகதி பெண்களுக்கான 800 மீட்டரில் பங்குபற்றவுள்ளார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<