அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆபிரிக்கா கண்டத்தின் முதல் நாடாக நைஜீரியா தகுதி பெற்றுள்ளது.
ஆபிரிக்க மண்டலத்திற்காக கடந்த சனிக்கிழமை (07) நடைபெற்ற ஸம்பியா (Zambia) அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நைஜீரியா உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்துகொண்டது.
இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா ஆபிரிக்க மண்டலத்தின் B குழுவில் மொத்தம் 13 புள்ளிகளை பெற்று அந்த குழுவில் உள்ள ஏனைய அணிகளால் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றது.
மறுபுறம் இந்த குழுவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸம்பியா உலகக் கிண்ண கனவுடனேயே நைஜீரியாவை எதிர்கொண்டது. போட்டி ஆரம்பித்து 22 ஆவது நிமிடத்தில் அகஸ்டின் முலென்கா கோல் போட்டபோது ஸம்பிய அணி முன்னிலை பெற்றதாக கொண்டாடியது. ஆனால் நடுவர் அதனை ஓப்சைட் கோலாக அறிவித்தார்.
2012 ஆம் ஆண்டு ஆபிரிக்க சம்பியனான ஸம்பியா கோல் போட பல முயற்சிகளில் ஈடுபட்டபோதும் நைஜீரிய அணியின் தற்காப்புக்கு முன் அது தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நைஜீரியாவின் மாற்று வீரராக களமிறங்கிய ஆர்சனல் அணியின் அலெக்ஸ் இவோபி ஸம்பியாவின் கனவை தகர்த்தார். போட்டியின் 74 ஆவது நிமிடத்தில் சக வீரர்களான விக்டர் மோசஸ் மற்றும் ஷேகு அப்துல்லாஹி பரிமாறிய பந்தை பொனால்டி எல்லைக்குள் வைத்து பெற்ற இவோபி எதிரணி கோல் காப்பாளரை முறியடித்து அதனை கோலுக்குள் செலுத்தினார்.
2018 உலகக் கிண்ணத்திற்கு ஆபிரிக்க மண்டலத்தில் இருந்து மொத்தம் ஐந்து அணிகளே தேர்வு செய்யப்படும் நிலையில், ஐந்து குழுக்களாக ஆடப்படும் தகுதிகாண் போட்டிகளின் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தைப் பெறும் அணிகளே முன்னேறும்.
இதன்படி B குழுவில் இருந்து நைஜீரியா தகுதி பெற்றிருப்பதால் அந்த குழுவில் உள்ள ஸம்பியா, கெமரூன் மற்றும் அல்ஜீரிய அணிகளுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு பறிபோனது. கெமரூன் அணி 2017 ஆபிரிக்க சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கெமரூன் மற்றும் அல்ஜீரிய அணிகள் கடந்த உலகக் கிண்ண போட்டியின் இரண்டாவது சுற்றுவரை முன்னேறிய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய அணி உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறுவது இது ஆறாவது தடவையாகும். 1994 ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா அது தொடக்கம் 2006 இல் ஜெர்மனியில் நடந்த உலகக் கிண்ணம் தவிர்த்து அனைத்து உலகக் கிண்ண போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று (08) கொங்கோ அணியை எதிர்கொள்ளும் எகிப்து அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டாவது அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளது. எகிப்து D குழுவில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதுவரை 13 அணிகள் தேர்வு
ஹொன்டுரஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில் 95 ஆவது நிமிடத்தில் பதில் கோல் போட்டு 1-1 என ஆட்டத்தை சமநிலை செய்த கொஸ்டா ரிகா அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.
வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்தில் கொஸ்டா ரிகா உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்துகொண்டது. ஏற்கனவே இந்த மண்டலத்தில் இருந்து மெக்சிகோ அணி தகுதி பெற்றுள்ளது.
கொஸ்டா ரிகா தலைநகரில் நடைபெற்ற போட்டியின் 66 ஆவது நிமிடத்தில் எட்டி ஹெர்னன்டஸ் தலையால் முட்டி போட்ட கோல் மூலம் ஹொன்டுரஸ் முன்னிலை பெற்றது. இந்நிலையில் கொஸ்டா ரிகா உலகக் கிண்ணத்தை உறுதி செய்ய ஒரு புள்ளி தேவைப்பட்ட நிலையில் போட்டி முடிவடையும் தறுவாயில் சான் ஜோஸ் அந்த அணிக்காக கோல் ஒன்றைப் பெற்றுக்கொடுத்தார்.
கொஸ்டா ரிகா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது ஐந்தாவது தடவையாகும். கடைசியாக 2014 பிரேசிலில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் கொஸ்டா ரிகா காலிறுதி வரை முன்னேறியது.
வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்தில் மொத்தம் மூன்று அணிகளே நேரடியாக தகுதிபெற முடியும் என்ற நிலையில் எஞ்சியுள்ள ஓர் இடத்திற்காக மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் பனாமா மற்றும் ஹொன்டுரஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதேவேளை லக்சம்பேர்க் அணியுடனான சனிக்கிழமை தகுதிகாண் போட்டியில் 8 கோல்களைப் போட்டு வெற்றியீட்டிய ஸ்வீடன் அணி நெதர்லாந்தின் உலகக் கிண்ண கனவை தகர்த்தது.
ஐரோப்பிய மண்டலத்தின் A குழுவுக்கான போட்டியில் ஸ்வீடன் கோல் மழை பொழிந்ததால் அந்த குழுவில் இரண்டாவது இடத்தை உறுதி செய்துகொண்ட ஸ்வீடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தை விடவும் 12 மேலதிக கோல் வித்தியாசத்தை பெற்றது.
எனினும் பெலாருஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்து 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோன்று A குழுவில் முதலிடத்தில் இருக்கும் பிரான்ஸ் நேற்று பல்கேரியாவை 1-0 என வீழ்த்தியது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) நடைபெறவுள்ள பெலாருஸ் அணியுடனான போட்டியில் வென்றால் பிரான்ஸ் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுவிடும்.
2010 உலகக் கிண்ண இறுதி போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து 2014 உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது. எனினும் அந்த அணி 2016 ஐரோப்பிய சம்பியன்சிப்ஸ் போட்டிக்கும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஜுன் 14 தொடக்கம் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண போட்டிக்கு மொத்தம் 32 அணிகள் விளையாடவுள்ள நிலையில் அதற்காக இதுவரை 13 அணிகள் தெரிவாகியுள்ளன. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா தகுதிகாண் ஆட்டம் இன்றியே தேர்வு செய்யப்பட்டது. தேர்வான ஏனைய அணிகள் வருமாறு, பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென் கொரியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், கொஸ்டா ரிகா மற்றும் நைஜீரியா.