தலைவர் பதவியிலிருந்து விலகும் நிக்கோலஸ் பூரன்!

West Indies Cricket

295

மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நிக்கோலஸ் பூரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்விகளுடன் வெளியேறியதன் காரணமாக இந்த தீர்மானத்தை நிக்கோலஸ் பூரன் மேற்கொண்டுள்ளார்.

>> இலங்கையில் அறிமுகமாகும் Lanka T10 லீக் தொடர்

T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றதுடன், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியது.

நிக்கோலஸ் பூரன் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின்போது, கீரன் பொல்லாரட் உபாதைக்கு முகங்கொடுத்ததால் அணியின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும் தொடர்ந்து கீரன் பொல்லாரட் உபாதைக்கு முகங்கொடுத்துவந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டார்.

நிக்கோலஸ் பூரனின் தலைமைத்துவத்தின் கீழ் மோசமான பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றிகளையும், 23 T20I போட்டிகளில் 8 வெற்றிகளை மாத்திரமே பெற்றிருந்தது.

>> LPL தொடரில் புதிய வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பா? கூறும் சமந்த டொடன்வெல!

அதேநேரம் இரண்டு முறை T20 உலகக்கிண்ண சம்பியன்களாக முடிசூடியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தது. குறித்த இந்த தோல்வி காரணமாக நிக்கோலஸ் பூரன் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நிக்கோலஸ் பூரன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், T20I போட்டிகளின் உப தலைவராக செயற்பட்டுவரும் ரோவ்மன் பவெல் மற்றும் ஒருநாள் போட்டிகளின் உப தலைவராக செயற்பட்டுவரும் ஷேய் ஹோப் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர்களாக நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<