இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதேபோல, அவர் பங்களாதேஷ் திரும்பும் தததி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹத்துருசிங்கவிற்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர் நிக் போதாஸ் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான சந்திக ஹத்துருசிங்க, இரண்டாவது முறையாக பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் திரும்பும் சகிப்
- டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனன்ஜய, கமிந்து!
- முதல் டெஸ்டில் அபார வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி
அதேபோல, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் இடைக்காலப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ள தென்னாபிரிக்கா நாட்டவரான நிக் போதாஸ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பங்களாதேஷ் அணியின் உதவிப் பயிற்சியாளராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா இங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்று 1க்கு 0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (30) சட்டோகிராமில் ஆரம்பமாகவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<