கடந்த 6 – 8 மாதங்களாக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்திரேலிய அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கும் இந்த சந்தோசமான தருணத்தில்
இன்று காலை இலங்கை கிரிக்கட் சபையில் இலங்கை கிரிக்கட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சிவிப்பாளராக நிக் பொத்தசை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் அரவிந்த டி சில்வா இந்த மாதம் கடைசியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் செயற்படுவார் என்ற நற்செய்தியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரவிந்த டி சில்வா கூறுகையில் “நான் சமிந்த வாஸோடு இது தொடர்பாக உரையாடினேன், அவரும் இந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கும் நோக்கில் உள்ளார். நாம் நினைக்கிறோம் நிறைய இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு சமிந்த வாஸ் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது சிறந்த விடயமாகும்” என்று கூறியுள்ளார்.
42 வயது நிரம்பிய சமிந்த வாஸ் இலங்கை அணியை பிரதிநித்துவப்படுத்தி 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலத்தில் இலங்கை அணிக்கு பாரிய பந்துவீச்சு சேவையை செய்துள்ளதோடு இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கும் வித்திட்ட வீரர் ஆவார். வாஸி என்ற புனைப்பெயரைக் கொண்ட இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கட்டுகளையும், 322 ஒருசாள் சர்வேசப் போட்டிகளில் விளையாடி 400 விக்கட்டுகளையும், 6 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது அவர் வேகப்பந்து வீச்சுத் துறையில் ஜாம்பவான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அத்தோடு இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் இன்று முதல் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ள செய்தியை இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 500 பிடியெடுப்புக்களையும் எடுத்துள்ளார்.
நிக் போதஸின் நியமனம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில்,
“அடுத்த உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கு இலங்கை அணியை கட்டியெழுப்புவதில் எனது நிர்வாகம் குறிக்கோளுடன் செயற்படுகின்றது. இவருடைய நியமனத்தின் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆலோசனையும் களத்தடுப்பு நுணுக்கங்களையும் பெற்றுத்தரும் என நம்புகின்றோம். இது இலங்கை அணிக்கு சாதகமானதாக அமையுமென எதிர்பார்க்கின்றேன்.
கடந்த காலங்களில் எமது அணி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. நிக் போதஸின் நியமனம், இலங்கை அணியின் களத்தடுப்பிற்கு தேவையான பயிற்சிகளையும் ஊக்கத்தையும் அளிக்குமென” அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற நிக் போதஸ் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ” நான் இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றதையிட்டு மிகவும் சந்தோசம் அடைகிறேன். என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி, எனக்கு இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் க்ரஹேம் போர்ட்டை நீண்டகாலமாகத் தெரியும். நானும் அவரின் பயிற்சியின் கீழ் விளையாடியுள்ளேன். அத்தோடு சிமோன் வில்லிசையும் நான் இங்கிலாந்தில் இருக்கும் போது நன்றாகத் தெரியும். இதனால் இவர்களோடு இணைந்து செயற்படவுள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உளள்து” என்று கூறியிருந்தார்.