காயத்தால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறிய நெய்மார்

347
Neymar

வலது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நெய்மார் செவ்வாய்க்கிழமை (19) பிரேசில் அணியின் பயிற்சியில் இருந்து 15 நிமிடங்களிலேயே வெளியேறியுள்ளார். எனினும் சுவிட்சர்லாந்துடனான போட்டியில் அவர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயமே இதற்கு காரணம் என்றும் அவரது வலதுகாலில் ஏற்பட்ட அண்மைய காயத்துடன் இது தொடர்புபட்டதல்ல என்றும் பிரேசில் அணி மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில்

பிஃபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில்..

சொச்சியில் இடம்பெற்ற பயிற்சியின்போது திடீரென வெளியேறிய நெய்மார், மைதானத்தில் இருந்து நொண்டியபடியே உடைமாற்றும் அறைக்குச் சென்றார்.  

நெய்மார் ஓடும்போது வேதனையை உணர்ந்ததாலேயே முன்னெச்சரிக்கையாக அவர் மைதானத்தில் வெளியேறியதாக மருத்துவர் ரொட்ரிகோ லாஸ்மார் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து நெய்மாருக்கு செவ்வாய்க்கிழமை பின்னேரம் உடற்பயிற்சி சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு இன்று நடைபெறும் பயிற்சிகளுக்கு உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் அணி தனது E குழுவின் இரண்டாவது போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (22) கொஸ்டாரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

பிரேசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சுவிட்சர்லாந்துடனான ஆரம்ப போட்டியை 1-1 என சமநிலையில் முடித்துக் கொண்டது. எனினும் குறித்த முடிவு அவ்வணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையிலேயே அமைந்தது.

‘அமைதி காக்கவே முடியுமாக உள்ளது’ என்று லாஸ்மார் குறிப்பிட்டார். ‘இன்று (செவ்வாய்க்கிழமை) குறுகிய உடற்பயிற்களை ஆரம்பிக்கவே திட்டமிட்டோம். முக்கிய பயிற்சிகள் நடைபெறவேண்டி உள்ளது. நெய்மார் கொஞ்சமே பயிற்சி பெற்றார். வேதனையை உணர்ந்த நிலையில் உடற்சிகிச்சை மருத்துவரிடம் சென்றார். நாளை (20) பயிற்சிகள் வழக்கமாக இருக்கும் என்னும் அவர் கூறினார்.

ஞாயிறு நடைபெற்ற சுவிட்சர்லாந்துடனான போட்டிக்கு அடுத்த தினத்தில் நெய்மார் பயிற்சிகளில் ஈடுபடவில்லை. சுவிட்சர்லாந்துடனான போட்டியில் அவர் 10 தடவைகள் கீழே விழுந்தார். உலகக் கிண்ண போட்டிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வீரர் ஒருவர் இத்தனை தடவை கிழே விழுந்ததில்லை.

எனினும் திங்கட்கிழமை பயிற்சியில் பிரேசில் வீரர்கள் இலேசான ஓட்ட பயிற்சிகளிலேயே ஈடுபட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் இருந்து நெய்மார் வெளியேறி இருப்பது அவதானத்திற்கு உரியதாக உள்ளது.