இலங்கை வந்தடைந்த தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்கள்

National Football

298

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்றுவிப்பாளர் அண்ட்ரூ மொர்ரிஸன் மற்றும் கெய்த் ஸ்டீவன்ஸ் ஆகியோர் தேசிய அணியுடனான கடமைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் நேற்று (15) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை கால்பந்து சம்மேளனம், இலங்கை ஆடவர் கால்பந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அண்ட்ரூ மொர்ரிஸனையும், உதவிப் பயிற்றுவிப்பாளராக கெய்த் ஸ்டீவன்ஸினையும் நியனம் செய்த தகவலை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இலங்கை அணி AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயார்படுத்தப்படவுள்ள நிலையில், குறித்த புதிய பயிற்றுவிப்பாளர்கள் விரைவில் தேசிய அணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இருவரையும் இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் ஹிரான் ரத்னாயக்க மற்றும் இலங்கை கால்பந்து சம்மேனத்தின் போட்டித் தொடர்களுக்கான பொறுப்பாளர் ஆசிப் அன்சார் ஆகியோர் பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புதிய பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமருடன் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாரின் Aspire Foundation உடன் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் கால்பந்து விளையாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரின் நியமனம், இலங்கை கால்பந்து சம்மேளனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதன்படி, மென்சஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் முன்னாள் தலைவரான என்டி மொர்ரிஸன், அந்த கால்பந்து கழகத்திற்காக 1998 தொடக்கம் 2002 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளில் ஆடியிருந்தார். அத்துடன் மொர்ரிஸன் ஹேடர்ஸ்பீல்ட் டவுன் (Huddersfield Town), பிளக்பூல் (Blackpool) மற்றும் பளக்பேர்ன் ரோவேர்ஸ் (Blackburn Rovers) போன்ற அணிகளையும் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்.

மேலும் மொர்ரிஸன், வேல்ஸ் தேசிய லீக்கில் (Welsh National League), Connah’s Quay Nomads கால்பந்து கழகத்தின் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராகவும் முகாமையாளராகவும் 2015 தொடக்கம் 2021 வரையிலான காலப்பகுதியில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, புதிய உதவிப் பயிற்றுவிப்பாளரான கெய்த் ஸ்டீவன்ஸ் பிரீமியர் லீக்கில் (EFL) இதுவரை 557 தடவைகள் பிரசன்னமாகியிருப்பதோடு, மில்வோல் (Millwall) அணிக்காக 1980 தொடக்கம் 1999 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் லீக்குகளில் பணியாற்றிய  பாரிய அனுபவத்தினை கொண்டிருக்கும் கெய்த் ஸ்டீவன்ஸ், இலங்கை கால்பந்து அணியில் வீரர்களின் திறன் விருத்திக்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், உடற்தகுதி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டவரான மார்கொஸ் ஏற்கனவே தேசிய அணியுடன் இணைந்து உடற்தகுதிக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<