ஓய்வை அறிவித்த நியூசிலாந்தின் டேனியல் ப்லைன்

133
Espncricinfo

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேனியல் ப்லைன் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டில் 16 வருடங்களாக விளையாடிவந்த இவர், தேசிய அணிக்காக 24  டெஸ்ட், 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் இலங்கைப் பயணம் பிற்போட வாய்ப்பு

ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் …………………….

இவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய அறிமுகப் போட்டி அந்த அணியின் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இருந்தது. லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 118 பந்துகளுக்கு 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியின் தோல்வியை தவிர்த்ததுடன், போட்டியை சமப்படுத்தியிருந்தார்.    

எனினும், இதற்கு அடுத்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனின் பௌன்சர் பந்து இவரது முகத்தில் தாக்கியதில், அவருடைய முன் பற்கள் இரண்டும் உடைந்ததில், அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதை இவர் குறைத்துக்கொண்டார். அதேநேரம், நியூசிலாந்து அணியிலிருந்து வருகைத்தந்த திறமைமிக்க வீரர்களும் இவருடைய எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குறியாகிக்கினர். 

இதன் காரணமாக இறுதியாக 2013ம் ஆண்டு நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடியதுடன், அதன் பின்னர், இவர் தேசிய அணிக்காக விளையாடவில்லை. எனினும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய இவர், நொர்தென் டிஸ்ட்ரிக் அணிக்காக 20 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 

அதுமாத்திரமின்றி நொர்தென் டிஸ்ட்ரிக் அணியின் தலைவராக 47 போட்டிகளில் செயற்பட்டுள்ள இவர், 25 ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 

டக்வெத்-லூயிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம்

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ……………………

 

தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட டேனியல் ப்லைன், “தேசிய அணிக்காக விளையாடுவது எந்தவொரு வீரருக்கும் மிகப்பெரிய பரிசு. காரணம் இளம் வயதிலிருந்து அதுதான் குறிக்கோளாக இருக்கும். அதுமாத்திரமின்றி, நான் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பில் சிந்திக்கும் போது, மனநிறைவாக இருப்பதற்கான விடயங்கள் செய்துள்ளேன் என நினைக்கிறேன்”  

“தேசிய அணிக்காக நான் விளையாடும் போது இருந்த வீரர்கள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பானதாக்கியிருந்தனர். அவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமல்ல. கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் உள்ள விடயங்களையும் கற்றுக்கொடுத்தவர்கள். அதேநேரம், நொர்தென் டிஸ்ட்ரிக் அணிக்காக விளையாடி கிண்ணம் வென்றமை மற்றும் இதுபோன்ற வீரர்களுடன் விளையாடியமையானது மறக்க முடியாத விடயமாகும்” என்றார்.

நியூசிலாந்து அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1038 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 135 முதற்தர போட்டிகளில் விளையாடி 21 சதம் உள்ளடங்களாக 7,815 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<