இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது T20i போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக, சுசி பேட்ஸ், அமிலியா கேர் ஆகியோரது துடுப்பாட்டங்கள் மற்றும் ஈடன் காசன் உள்ளிட்ட சகல பந்துவீச்சாளர்களினதும் துல்லியமான பந்துவீச்சு என்பன நியூசிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தன.
கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று (08) காலை ஆரம்பமான இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதலில் களத்தப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் விஷ்மி குணரத்ன 28 பந்துகளில் 26 ஓட்டங்களையும், அனுஷ்கா சன்ஜீவனி மற்றும் ஓஷதி ரணசிங்க ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் ஈடன் காசன், அமிலியா கேர், லீ காஸ்பெரக் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், சுசி பேட்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
- T20I தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
- ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த சமரி அதபத்து
- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய உதவிப் பயிற்சியாளர்
இதையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி, 18.5 ஓவர்களில் 107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
அவ்வணி சார்பாக சுசி பேட்ஸ் 47 பந்துகளில் 44 ஓட்டங்களையும், அமிலியா கேர் 28 பந்துகளில் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் இனோஷி பிரியதர்ஷனி 3 விக்கெட்டுகளையும், கவிஷா தில்ஹாரி, உதேஷிக்கா பிரபோதினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகியாக சுசி பேட்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 2ஆவது T20i போட்டி நாளை மறுதினம் (10) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<