பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்பொழுது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 138 ஓட்டங்களால் வெற்றி கொண்டமையினால் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றிகொண்டு பாகிஸ்தான் அணியை வைட்வொஷ் செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்களைப் பெற்றது. ஜீத் ரவால் 55 ஓட்டங்களையும், BJ வால்டிங் 49 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். பந்துவீச்சில் சொஹைல் கான் 99 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 90 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் அஹமட் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணி சார்பாகப் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட டிம் சவுத்தி 21 ஓவர்களுக்கு 80 ஓட்டங்களைக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
55 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னின்சில் ரொஸ் டெய்லரின் அதிரடி சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. நியூசிலாந்து அணி சார்பாக ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், டொம் லதம் 80 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பாகப் பந்து வீச்சில் இம்ரான் கான் 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 369 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சமி அஸ்லம் மற்றும் அசார் அலி முதல் விக்கெட்டுக்காக 6௦ ஓவர்கள் வரை துடுப்பாடி 131 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டதோடு சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொடுத்தனர்.
கூடிய ஓட்டங்களாக சமி அஸ்லம் 91 ஓட்டங்களையும் அசார் அலி 58 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் தேநீர் இடைவேளைக்கு பின் 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி போட்டியை சமநிலைப்படுத்தும் என்று எதிர்பார்த்த போதிலும் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற 92.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 23௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நீல் வாக்னர் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிச்செல் சந்ட்னர் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவு செய்யப்பட்டார்.