தொலைபேசியில் ஹேரத்தின் ஆலோசனையைப் பெறும் லசித்

1393
Lasith Embula

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய, உபாதைக்கு பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பியதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்

ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய லசித் எம்புல்தெனிய, குறித்த தொடரில் உபாதைக்கு முகங்கொடுத்தார். ஐந்து மாதங்கள் உபாதையிலிருந்த இவர், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றார்.

இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் டில்ருவான் பெரேரா

இலங்கை அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சு ……..

முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் சிறந்த முறையில் பந்துவீச தவறியதற்கான காரணத்தை எம்புல்தெனிய எமது ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டார்.

“உபாதைக்கு பின்னர் முதல் போட்டியில் விளையாடியதால், முதல் இன்னிங்ஸில் சற்று தடுமாற்றம் அடைந்தேன். அதனால், ஒரே மாதிரியான பந்துகளை வீசுவதற்கு முடியவில்லை. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அதனை திருத்திக்கொண்டு பந்துவீசினேன். அதனால் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடியதாக இருந்தது” 

அதேநேரம், அனுபவ வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் வழங்கிய ஆலோசனைகள் பந்துவீசுவதற்கு இலகுவாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.  

“அனுபவ வீரர்களான மெதிவ்ஸ் மற்றும் திமுத் ஆகியோர் எனக்கு அழுத்தத்தை வழங்கவில்லை. அவர்கள் நான் சுதந்திரமாக பந்துவீசுவதற்கான இடத்தை வழங்கினர். அவர்கள் எப்போதும், தடுமாற்றமடையாமல் ஒரே மாதிரியான பந்துகளை வீசுமாறு கூறினர். அவர்கள் எனக்கு எந்த வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை”

மீண்டும் அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என குற்றச்சாட்டு

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய ஐசிசியின் ………

லசித் எம்புல்தெனிய தற்போது இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளராக வளர்ந்து வருகிறார். குறிப்பாக, ரங்கன ஹேரத்தின் ஓய்வின் பின்னர், அவரின் இடத்தை லசித் எம்புல்தெனிய பூர்த்திசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரங்கன ஹேரத்திடம் இருந்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் லசித் எம்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

“ரங்கன ஹேரத் பந்துவீச்சில் எனக்கு அதிகமான உதவிகளை வழங்கி வருகின்றார். எனது பந்துவீச்சில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நான் உடனடியாக அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வேன். எந்த நேரத்திலும் அவரிடன் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (22) கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<