இலங்கைக்கு எதிராக நாளை (22) நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாற்றுத் திட்டங்களுடன் களமிறங்கப்போவதாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் thepapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார்.
மீண்டும் அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என குற்றச்சாட்டு
இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய ஐசிசியின் விதிமுறையை மீறி…
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பீ. சரா ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. காலியில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற உற்சாகத்தில் தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இரண்டாவது மோதலிலும் களமிறங்குகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி பற்றி கருத்து தெரிவித்த டெய்லர்,
“போட்டியின் ஆரம்பத்தில் நாம் 260 க்கும் அதிகமான ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தோம். அதனை எட்டுவது கடினம் என்று நாம் நினைத்தோம். இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப வீரர்களின் ஆட்டம் போட்டியை எம்மிடம் இருந்து பறித்துவிட்டது.
நாம் வெற்றியை பெறுவதற்கு போராடியபோதும் முடியமால்போனது. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை இவ்வாறு ஆரம்பித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
பீ. சராவில் நாம் கடந்த காலத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதனை மீண்டும் செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
நியூசிலாந்து அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்த அணி காலியில் நடந்த முதல் டெஸ்டில் தோற்ற நிலையிலேயே பி. சாராவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.
அந்தப் போட்டியில் அணித்தலைவராக இருந்த டெய்லர் மற்றும் தற்போதைய அணித்தவைர் கேன் வில்லயம்சன் இருவரும் அபார சதம் பெற்றதன் மூலம் அந்த அணி 167 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை சமன் செய்தது.
“திறமையை வெளிப்படுத்திய மைதானத்திற்கு திரும்புவது எப்போதும் சிறந்ததாக இருக்கும். ஆனால் இது மாறுபட்ட போட்டி, மாறுபட்ட சூழல். நாம் தொடரில் 1-0 என பின்தங்கி இருக்கிறோம். டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை எதிர்பார்க்கிறோம். அதற்காக நாம் போராடுவோம். இலங்கை அணி அதனை தடுப்பதற்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பீ. சரா ஓவல் மைதானத்தில் இலங்கை அணி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டியபோதும் ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது குறைந்தது 10 போட்டிகளில் ஆடிய சொந்த மைதானங்களில் கண்டி அஸ்கிரிய மைதானத்திற்கு அடுத்து இந்த மைதானத்திலேயே இலங்கை மோசமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சு தீர்க்கமானதாக இருந்தது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான லசித் எம்புல்தெனிய மற்றும் அகில தனன்ஜய இருவருக்கும் நியூசிலாந்து வீரர்கள் சிறந்த முறையில் முகம்கொடுப்பதை காண முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான திட்டம் பற்றி டெய்லர் குறிப்பிடும்போது,
முதல் போட்டியின் உத்வேகத்துடன் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான…
“முதல் டெஸ்டில் அடுகளத்தை தெரிந்துகொண்டு விளையாடினோம். இரு இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களும் மிக மெதுவாக மாறுபாடுகளுடன் பந்துவீசுகின்றனர். நாம் மாறுபட்ட போட்டித் திட்டத்துடன் இந்த போட்டியில் ஆடவுள்ளோம்.
எதரணிக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும் ஓட்டங்களை சேகரிக்கும் முறையே எனது போட்டித் திட்டமாக உள்ளது. ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப ஆடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி நாளை ஆரம்பமாகும் போட்டியில் தோற்றால் பின்தள்ளப்படும் நிலை உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியால் வெற்றி பெற முடியாத நிலையில் சமநிலை செய்வதற்கு பி. சரா டெஸ்டை வெல்வது கட்டாயமாகும். இது குறித்து,
“போட்டி ஒன்றை தோற்றது ஏமாற்றமாக இருந்தாலும், சிறந்த முடிவொன்றை பெறுவதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இது ஒரு புதிய போட்டி. இதற்கு முன்னரும் 1-0 என பின்தங்கிய நிலையில் மீண்டு வலுவான ஆட்டத்தை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம். மிகச்சிறந்த இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் ரொஸ் டெய்லர் குறிப்பிட்டார்.