எம்மால் இன்னும் வெற்றிபெற முடியுமென நம்புகிறோம் -டொம் லேதம்

281
Tom Latham

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில் தம்மால் இன்னும் வெற்றி பெற முடியும் என்று நம்புவதாக நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டொம் லேதம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான நேரம் சீரற்ற காலநிலையால் தடைப்பட்ட நிலையில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்..

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களை பெற்றதோடு முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி நியூசிலாந்து அணி 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. 

இதில் நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 154 ஓட்டங்களை பெற்ற டொம் லேதம் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது, 

“எத்தனை ஓட்ட இலக்கு எமக்கு தேவைப்படுகிறது என்று நூறு வீதம் உறுதி இல்லாமல் உள்ளது. காலநிலை நாளை எவ்வாறு அமையும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்தது எமது சாதகமாக இருந்தது. கொலின் (கிரான்ட்ஹோம்) சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அவர் அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். 

போதுமான ஓட்டங்களை குவித்து ஒரு கட்டத்தில் பந்துவீசி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்க்கிறோம்” என்றார்.

நியூசிலாந்து அணி சார்பில் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பி.ஜே. வொட்லின் மற்றும் கிரான்ட்ஹோம் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கிரான்ட்ஹோம் 75 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 83 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

“எம்மால் இந்த டெஸ்ட்டை வெல்ல முடியும் என்று தொடர்ந்து நம்புகிறோம். கொலின் மற்றும் பிஜேவின் இணைப்பாட்டத்தால் நாம் சிறந்த நிலையில் உள்ளோம். நாளைய ஆட்டத்திற்கு திரும்பி வேகமாக ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்க்கிறோம். நாளை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் லேதம் குறிப்பிட்டார்.

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் தற்போது உலக டெஸ்ட்…

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு மாத்திரமே வெற்றி வாய்ப்பு போதிய அளவில் உள்ளது. 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் மேலும் வேகமாக ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. என்றாலும் காலநிலை பாதகமாக அமைந்தால் நியூசிலாந்து அணி தொடரை இழந்துவிட வாய்ப்பு உள்ளது.   

“இந்த ஆடுகளத்தில் பந்து தொடர்ந்து சுழல்கிறது. புதிய பந்து சற்று வேகமாக வருகிறது. பந்துவீச்சாளர்களுக்கு போதுமான அளவு சாதகமான சூழல் இங்கு காணப்படுகிறது. இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க போதுமான காலம் எமக்கு இருந்தால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறான ஆடுகளத்தில் விரைவாக எதுவும் நடக்கலாம். எம்மால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் நாளை கடைசி நாள் ஆட்டம் குறித்து லேதம் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் நிலையில் தொடரை வெற்றிபெற இரண்டாவது டெஸ்ட்டை சமநிலையில் முடித்தால் போதுமானதாகும்.  

27 வயதான டொம் லேதம் கடைசியாக விளையாடிய தனது எட்டு இன்னிங்சுகளில் நான்கு தடவைகள் 150 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ளார். “தொடர்ச்சியாக ஒருசில தொடர்களில் விளையாடுவது சிறந்ததாகும். எமக்கு தொடர்ந்து ஒரு சில தொடர்கள் உள்ளன. எனது ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்த எதிர்பார்த்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<