நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20I உலகக்கிண்ணத் தொடருக்கான தயார்படுத்தலை முன்னிட்டு 5 T20I போட்டிகள் மற்றும் ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.
SLC அழைப்பு T20 லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு
ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 17, 19 மற்றும் 21ம் திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், T20I தொடர் செப்டம்பர் 25ம் திகதி லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது.
நியூசிலாந்து தொடருடன், பாகிஸ்தான் அணியின் 2021-22 பருவகாலம் ஆரம்பமாகவுள்ளதுடன், குறித்த இந்த தொடரையடுத்து இங்கிலாந்து மகளிர் மற்றும் இங்கிலாந்து ஆடவர் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. குறித்த தொடர்களையடுத்து ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாடுவதற்கான வருட இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் செல்கிறது.
நியூசிலாந்த தொடர் குறித்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான், “இந்த பருவகாலமானது, முன்னணி அணியான நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருடன் ஆரம்பமாவது மிகச்சிறப்பான விடயமாகும். உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியென்பதுடன், டெஸ்ட் சம்பியனாகவும் முடிசூடியிருந்தனர். நியூசிலாந்து அணியுடன் போட்டியிடவுள்ளமை ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாகும். அத்துடன், பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்பதையும் இதன்மூலம் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது, கடந்த 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சர்வதேச அணிகள் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்தன. எனினும், தற்போது மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது, 2003ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…