கிரிக்கெட் ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள 12ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தினை நியூசிலாந்து கிரிக்கெட் இன்று (03) வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான எதிர்பார்ப்புக்கள் இப்போதிருந்தே அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கவுள்ள பத்து அணிகளதும் வீரர்கள் குழாத்தினை அறிவிக்கும் கடைசி நாளாக இம்மாதம் 26ஆம் திகதியினை அறிவித்திருக்கின்றது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய திமுத் கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம்
இலங்கை டெஸ்ட் அணியின் தற்காலிக …..
இதன் அடிப்படையிலேயே, நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் 15 பேர்கள் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.
உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் நியூசிலாந்து குழாத்தில் முக்கிய உள்ளடக்கமாக ஒருநாள் போட்டிகளில் இதுவரையில் பங்கெடுக்காத டொம் ப்லேன்டலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான டொம் ப்லன்டல், அண்மையில் நியூசிலாந்து அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக உள்வாங்கப்பட்டிருந்த ஏனைய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் டிம் செய்பேர்ட்டிற்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
நியூசிலாந்து அணிக்கு முன்னதாக டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் ஆடியுள்ள ப்லன்டல், லிஸ்ட் – A போட்டி எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 23.81 என்கிற சராசரியுடன் 763 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, விக்கெட் காப்பாளராக 41 ஆட்டமிழப்புக்களையும் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, டிம் செய்பேர்ட் உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிய போது ஏற்பட்ட விரல் உபாதையினால் உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இருந்து விலகியிருக்கின்றார்.
இதேநேரம், சகலதுறை வீரரான கொலின் டி கிரான்ட்ஹோமினை நியூசிலாந்து அணி, டக் ப்ரெஸ்வெல்லிற்கு பதிலாக உலகக் கிண்ணத்திற்காக உள்வாங்கியிருக்கின்றது. இந்நிலையில் சுழல் வீரரான டிம் செளத்தி டொட் அஸ்லின் இடத்தினை நியூசிலாந்து குழாத்தில் எடுத்துக் கொள்கின்றார்.
இவர்களோடு, நியூசிலாந்து அணி சகலதுறை வீரரான ஜேம்ஸ் நீஷம் மற்றும் இடதுகை சுழல் வீரரான மிச்செல் சான்ட்னெர் ஆகியோரினால் இன்னும் பலம் பெறுகின்றது.
நியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தின் போது, வேகப்பந்து வீச்சாளர்களாக டிம் செளத்தி, ட்ரென்ட் போல்ட் மற்றும் லொக்கி பெர்குஸன் ஆகியோர் வலுச்சேர்க்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க அண்மைக்காலமாக திறமையினை வெளிப்படுத்த தவறியிருக்கும், அதிரடி துடுப்பாட்ட வீரரான கொலின் மன்ரோ மீது நம்பிக்கை வைத்து நியூசிலாந்து தேர்வாளர்கள் அவருக்கும் உலகக் கிண்ணத்தில் வாய்ப்பினை வழங்கியிருக்கின்றனர்.
“ பெரிய தொடர் ஒன்றுக்காக வீரர்களை தெரிவு செய்யும் போது சில இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். இதனால், சில வீரர்களுக்கு ஏமாற்றமும் ஏற்படும். “ என உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து குழாம் பற்றி பேசும் போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டேட் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானை மிரட்டிய ஆரோன் பின்ச் தரவரிசையில் முன்னேற்றம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் …….
உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நியூசிலாந்து அணி, எதிர்வரும் நாட்களில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெறவுள்ள இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்ற பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரிலும் ஆட திட்டமிட்டிருக்கின்றது.
எனினும், இந்த பயிற்சி முகாமிலும் அதனை அடுத்து இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரிலும் தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி வரும் முக்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, கார்டிப் நகரில் வைத்து ஜூன் மாதம் 01ஆம் திகதி இலங்கையுடன் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நியூசிலாந்து குழாம்
கேன் வில்லியம்சன் (அணித் தலைவர்), டொம் ப்லன்டல், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹோம், லொக்கி பெர்குஸன், மார்டின் கப்டில், மேட் ஹென்ரி, டொம் லேதம், கொலின் மன்ரோ, ஜிம்மி நீஷம், ஹென்ரி நிகோல்ஸ், மிச்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் செளத்தி, ரொஸ் டெய்லர்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<