நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 19 வருடங்களாக போட்டிகளில் விளையாடாத நியூசிலாந்து அணி, எதிர்வரும் டிசம்பர் மற்றும் அடுத்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் அங்கு சென்று போட்டிகளில் விளையாடவுள்ளது.
>> மேஜர் பிரீமியர் லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெதிவ்ஸ், திக்வெல்ல
இந்தப்போட்டித் தொடரை பொருத்தவரை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரின் பிற்பகுதி போட்டி அட்டவணைகளுடன் நியூசிலாந்து – பாகிஸ்தான் தொடர் மோதும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 27ம் திகதி முதல் 31ம் திகதிவரை கராச்சியில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஜனவரி 4 முதல் 8ம் திகதிவரை முல்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஐசிசி சுபர் லீக்கிற்கான மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 11, 13 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
குறித்த இந்தப்போட்டிகளுடன் நியூசிலாந்து அணி நாடு திரும்பிய பின்னர், மீண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 5 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்லவுள்ளது.
முதல் 4 T20I போட்டிகள் ஏப்ரல் 13, 15, 16 மற்றும் 19ம் திகதிகளில் கராச்சியில் நடைபெறவுள்ளதுடன், கடைசி T20I போட்டி மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளும் லாஹூரில் 23, 26 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இறுதியாக மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளும் மே மாதம் முதலாம், 4ம் மற்றும் 7ம் திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<