பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான அணியில் உபாதையிலிருந்த மார்டின் கப்டில் அணிக்கு திரும்பியுள்ள அதேவேளை, அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு இறுதி போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டிகள் நெருங்கி வருகின்ற இந்த காலப்பகுதியில் இருதரப்பு தொடர்கள் மூலம் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஒரு மாதகால சுற்றுப்பயணத்தினை நியூஸிலாந்துக்கு மேற்கொண்டு அங்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் போன்ற இரு தொடர்களில் ஆடவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்
தற்போது நியூஸிலாந்து அணி இந்திய அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றது. பங்களாதேஷ் அணி வீரர்கள் அந்நாட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி நேற்றுடன் (08) அதிலிருந்து ஓய்வடைந்துள்ளனர். நியூஸிலாந்து அணிக்கு நாளை (10) நடைபெறவுள்ள டி20 போட்டி இந்திய அணியுடனான இரு தொடர்களினதும் இறுதி போட்டியாக அமையவுள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான நியூஸிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் இன்று (09) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் கெவின் லார்செனினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்டின் கப்டில் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு உபாதைக்குள்ளானார். இதன் காரணமாக இறுதி ஒருநாள் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் முழுமையாக விலகியிருந்தார்.
இந்நிலையில் அவர் குறித்த உபாதையிலிருந்து மீண்டு, மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் நாளை (10) இவரின் உடற்தகுதி பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு பணிச்சுமை கருதி மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. வில்லியம்சனின் குறித்த ஓய்வினால் அவரின் வெற்றிடத்திற்கு சகலதுறை வீரர் கொலின் மன்ரோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது போட்டிக்கான அணித்தலைவராக டொம் லேதம் செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சுழல் பந்துவீச்சாளரான இஷ் சொதி மற்றும் வேகப்பந்துவீச்சாளரான டொக் பிரேஸ்வெல் மற்றும் விக்கெட் காப்பாளரான டிம் சைப்ரெட் ஆகியோர் தேர்வுக்குழுவினால் அணிக்கு தவறவிடப்பட்டுள்ளனர்.
முழங்கால் சத்திர சிகிச்சையின் பின்னர் இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் இணைந்த மிட்செல் சேன்ட்னர் தொடர்ந்தும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதே போன்று முழங்கால் உபாதையின் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பிய மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான டுட் அஸ்டிலும் தொடர்ந்து அணியின் நீடிக்கின்றார்.
வேகப்பந்துவீச்சு வரிசையில் இந்திய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் விளையாடிய டிம் சௌத்தி அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் அந்த வரிசையில் ட்ரென்ட் போல்ட், லுக்கி போர்கசன் மற்றும் மெட் ஹென்ரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
டி20 சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா
அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் கொண்ட குழாம் பின்வருமாறு,
கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்) முதல் இரண்டு போட்டிகளுக்கு மாத்திரம், டுட் அஸ்டில், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிரெண்ட்ஹோம், லுக்கி போர்கசன், மார்டின் கப்டில், மெட் ஹென்றி, டொம் லேதம், கொலின் மன்ரோ (மூன்றாவது போட்டிக்கு மாத்திரம்), ஜிம்மி நேசம், ஹென்றி நிக்கெலஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் சௌத்தி, ரோஸ் டெய்லர்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அட்டவணை
13 பெப்ரவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – நேப்பியர் (பகலிரவு)
16 பெப்ரவரி – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – க்ரைசேர்ச் (பகல்)
20 பெப்ரவரி – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – டியூனிடின் (பகல்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<