சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னெர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் (29) வெல்லிங்டனில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து குழாத்தில் நீல் வாக்னெர் இடம்பிடித்த போதிலும், அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்காக பெயரிடப்பட்ட இறுதிப் பதினொருவர் அணியில் அவர் இடம்பெறவில்லை.
மறுபுறத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரை அணியில் இருந்து விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் நீல் வாக்னெர் இடம்பெற மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை நீல் வாக்னெர் வெளியிட்டுள்ளார்.
தனது திடீர் ஓய்வு முடிவு தொடர்பில் நீல் வாக்னெர் கருத்து தெரிவிக்கையில், இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நீல் வாக்னெர் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.
- நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு
- தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் டேரைல் மிச்சல்
- வரலாற்றை மாற்றி கிரிக்கெட்டில் புது உச்சத்தை தொட்ட பும்ரா
இந்த நிலையில், நியூசிலாந்து அணி, அவரை அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அணியில் மாற்று வீரராக பங்கேற்று தங்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு கூறி அவரை கௌரவப்படுத்தி உள்ளது.
தென்னாபிரிக்காவில் பிறந்த நீல் வாக்னெர், தன் நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட சரியான வாய்ப்பு கிடைக்காமல் 2008இல் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். 2012இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சுமார் 12 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடிய 37 வயதான நீல் வாக்னெர், அந்த அணிக்காக இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ஓட்டங்களையும், 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 5ஆவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
அதேபோல, நியூசிலாந்து அணிக்காக பல டெஸ்ட் தொடர் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த அவர், 2021இல் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்;ட் சம்பியன்ஷிப்பில் சம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணியிலும் இ;டம்பிடித்து விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<