முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!

ICC T20 World Cup 2022

313

T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்தை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் குழு 1இல் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

இதன்படி, அடிலெய்டில் இன்று (04) நடைபெற்ற நியூசிலாந்து – அயர்லாந்து இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

186 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த அணி சார்பில் போல் ஸ்டேர்லிங் அதிகபட்சமாக 37 ஓட்டங்களை எடுக்க, பந்துவீச்சில் லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி குழு 1இல் 7 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அத்துடன், இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணியாகவும் இடம்பிடித்தது.

ஐசிசி தொடர்களில் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகின்ற நியூசிலாந்து அணி. 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி, 2021 டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி, 2021 T20 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி என நியூஸிலாந்து விளையாடி உள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<