களனி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம் மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகத்திற்கிடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் சுபர் 8 சுற்றின் மூன்றாவது வாரப் போட்டி 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சொலிட் விளையாட்டுக் கழகம் சுபர் 8 சுற்றின் முதல் போட்டியில் 5-0 என கடற்படை அணியை வீழ்த்தியிருந்தாலும் இரண்டாவது போட்டியில் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகத்திடம் 3-0 என பரிதாபத் தோல்வி கண்டது. அதேபோன்று, நிவ் யங்ஸ் கழகம் முதல் வாரத்தில் கொழும்பு அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்த போதும், அடுத்த போட்டியில் ரினௌன் கழகத்திடம் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி கண்டது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற போட்டியின் ஆரம்பத்திலே நிவ் யங்ஸ் அணிக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றின்மூலம் கோல் பெறும் வாய்ப்புகளை பொஸ்டர் அமாதி தவறவிட்டார்.
அதன் பின்பு சற்று சுதாரித்து விளையாடிய சொலிட் கழக வீரர்கள் பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
எனினும், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஹசித ப்ரியங்கர நிவ் யங்ஸ் அணிக்காக முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். பொஸ்டர் அமாதி உள்ளனுப்பிய பந்தை லாவகமாக கோலினுள் அனுப்பினார் ஹசித ப்ரியங்கர. ரினௌன் கழகத்துடனும் இப்படியான கோலொன்றை அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தில் முன்னிலை பெற்ற நிவ் யங்ஸ், அதன் பின்பும் மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
சஜீவன் அடித்த பந்தை, நிவ் யங்ஸ் அணியின் கோல் காப்பாளர் சுபுன் கவீஷ் அருமையாகத் தடுத்து நிவ் யங்ஸ் அணியை தொடர்ந்தும் முன்னிலையில் வைத்திருந்தார்.
முதல் பாதியின் இறுதி நேரத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் இரு தரப்பினருக்கும் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போனது.
முதல் பாதி முடிவடையும் தருவாயில் நிவ் யங்ஸ் அணியின் திலங்க பிரியதர்ஷனவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இம்முடிவுடன் உடன்படாத நிவ் யங்ஸ் பயிற்றுவிப்பாளர் தமது அதிருப்தியை வெளியிட்டு, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
முதல் பாதி: சொலிட் விளையாட்டுக் கழகம் 00 – 01 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்
குறைந்தது ஒரு கோலாவது பெற வேண்டுமென்ற முனைப்பில் இரண்டாவது பாதியில் களமிறங்கியது சொலிட் விளையாட்டுக் கழகம். அதன் அங்கமாக இடைவேளையின் போது ஒரு மாற்றத்தினையும் அவ்வணி மேற்கொண்டது.
சொலிட் கழகம் கோலுக்கான பல வாய்ப்புகளை உருவாக்க எத்தனித்தாலும் அவற்றில் பல ஓப் சைடாக அமையப்பெற்றதால் அவர்களால் சிறந்த நிறைவைப் பெற முடியாமல் போனது.
எனினும் நிவ் யங்ஸ் அணியின் பின்கள வீரர்களின் தவறை சாதுர்யமாக பயன்படுத்திய சொலிட் அணி 63ஆவது நிமிடத்தில் கொலொன்றை பெற்றது. அவ்வணியின் தலைவர் எடிசன் பிகுராடோ தனக்குக் கிடைத்த பந்தை இஸ்மாயில் அபுமரிற்கு வழங்க, அவர் அதனை லாவகமாக கோலாக்கினார்.
அதன்பின்பு இரு அணிகளும் வெற்றி கோலை போடும் உத்வேகத்தில் விளையாடத் தொடங்கியதால் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியது.
போட்டியின் இறுதி நிமிடத்தில் நிவ் யங்ஸ் அணி கோல் போட முயற்சித்தபோதும், நடுவர் ஓப் சைட் என சைகை காண்பிக்க அவர்களது இறுதி முயற்சி ஏமாற்றமாகவே முடிந்தது.
எனவே, இரு அணிகளாலும் இறுதி வரை வெற்றி கோலினை போட முடியாமல் போனது. இதனடிப்படையில் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
முழு நேரம்: சொலிட் விளையாட்டுக் கழகம் 1-1 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன்– அரூப் இஷான் டேனியல் (சொலிட் விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம் – ஹசித ப்ரியங்கர 15’
சொலிட் விளையாட்டுக் கழகம்– இஸ்மாயில் அபுமரி 63’
மஞ்சள் அட்டை
நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்– திலங்க பிரியதர்ஷன 43’