டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின், சூப்பர் 8 சுற்றின் இறுதி வாரப் போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழக அணியை 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்திய நியூ யங்ஸ் கால்பந்தாட்டக் கழகம் சுப்பர் 8 இன் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துகொண்டது.
புளு ஸ்டாருக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த வெற்றியா?
கடந்த வாரம் ராணுவப்படை அணியிடம் 5-0 என்று பெரும் தோல்வியடைந்த நிலையிலேயே இப்போட்டியில் நியூ யங்ஸ் அணி களமிறங்கியது. அதேபோன்று மறுமுனையில், ரினௌன் கழகத்திடம் 2-1 என்று தோல்வியுற்ற நிலையில் கடற்படை அணி இன்றைய போட்டியை எதிர்கொண்டது.
முதல் பாதியில் நியூ யங்ஸ் அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. நியூ யங்ஸ் அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அதன் வீரர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணியின் பொஸ்டர் அமாடி சிறப்பாக கோலை நோக்கி உதைந்த பந்தை, கடற்படை அணியின் கோல் காப்பாளர் இமேஷ் பெர்னாண்டோ தடுக்க தவறியதால் நியூ யங்ஸ் அணிக்கான முதல் கோல் கிடைக்கப்பெற்றது.
கடற்படை அணி, நிர்மல் விஜேதுங்கவை வெளியேற்றி நாலக ரொஷானை களத்தில் இறக்கியது. நாலக ரொஷானை கோல் பெட்டியின் அருகே தவறான முறையில் நியூ யங்ஸ் வீரர் தடுத்ததால், கடற்படை அணிக்கு தண்ட உதை வழங்கப்பட்டது.
இதன்போது, உதைத்த தண்ட உதையை கவீஷ் பெர்னாண்டோ தடுக்க, அப்பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வர, மீண்டும் உதைத்த பந்து கோல் காப்பாளரின் கையில் சிக்கியது.
முதல் பாதி: நியூ யங்ஸ் கால்பந்து கழகம் 1-0 கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியின் 2ஆம் நிமிடத்தில் நியூ யங்ஸ் அணியின் தலைவர் மொகமட் பவ்சான் தனது அணிக்கான 2ஆவது கோலை அடித்தார். குறுக்கே வந்த பந்தை கடற்படை அணியின் கோல் காப்பாளர் தடுக்க முயன்ற பொழுதும், அது முடியாமல் போக, பவ்சான் யாருமில்லாத கோலினுள் பந்தை தலையினால் முட்டி அந்த கோலைப் பெற்றார்.
இதற்கு இரண்டு நிமிடங்களின் பின்னர் சுதத் ஜயலத் நியூ யங்ஸ் அணி சார்பாக 3ஆவது கோலை அடித்தார்.
அதன் பின்னர் 58ஆவது நிமிடத்தில் கடற்படை அணியின் சமீர கிரிஷாந்த தமது அணியின் சார்பாக முதலாவது கோலை அடித்த பொழுதும், அதற்கு பதில் கொடுக்கும் விதமாக 78ஆவது நிமிடத்தில் ஹசித ப்ரியங்கர நியூ யங்ஸ் அணி சார்பாக 4ஆவது கோலை பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் அவ்வணி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.
போட்டி முடிவடைய சற்று நேரத்திற்கு முன்னர், கடற்படை அணியின் நாலக ரொஷான் சிறப்பாக கோலை நோக்கி பந்தை உதைந்த பொழுதும், கவீஷ் சிறப்பாக அதைத் தடுத்தார்.
போட்டியில் கடற்படை அணியின் நாலக ரொஷானிற்கு ஏனைய வீரர்கள் துணையாக நிக்காமை அவர்களது கோல் வாய்ப்புக்கு பெறும் தடையாக இருந்தது.
முழு நேரம்: நியூ யங்ஸ் கால்பந்து கழகம் 4-1 கடற்படை விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ஹசித ப்ரியங்கர (நியூ யங்ஸ் கால்பந்து கழகம்)
கோல் பெற்றவர்கள்
நியூ யங்ஸ் கால்பந்து கழகம் – பொஸ்டர் அமாடி 21′, மொகமட் பவ்சான் 47′, சுதத் ஜயலத் 49′, ஹசித ப்ரியங்கர 78′
கடற்படை விளையாட்டுக் கழகம் – சமீர கிரிஷாந்த 58′