டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல

5897

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இன்னிங்சுகளில் பூச்சிய ஓட்டம் (Ducks) பெறாமல் இருந்த முதலாவது வீரராக தன்னை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.  

2014 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு திக்வெல்ல அறிமுகமாயிருந்த போதும், அப்போது தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை காட்டத் தவறியதனால் அணியில் தொடர்ந்து நீடித்திருக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லாது போயிருந்தது. மீண்டும் 2016ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தனது கவர்ச்சியான துடுப்பாட்ட முறை மூலம் தேர்வாளர்களை தன்பக்கம் ஈர்த்த திக்வெல்ல மூன்று வகைப் போட்டிகளிலும் இலங்கையின் நிரந்தரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்ற இலங்கை அணி

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள…

தற்போது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 ஆகிய அனைத்தையும் சேர்த்து 43 போட்டிகளில் பங்கேற்றுள்ள திக்வெல்ல இப்போட்டிகள் மூலம் இதுவரையில் 50 இன்னிங்சுகளில் பூச்சிய ஓட்டம் எதனையும் பெறாத வீரராக மாறியிருப்பதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக இன்னிங்சுகளில் பூச்சிய ஓட்டம் பெறாத வீரராகவும் மாறியிருக்கின்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இன்னிங்சுகள் பூச்சிய ஓட்டங்கள் பெறப்படாத சாதனை முன்னதாக இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் ப்ரிஜேஷ் பட்டேலினால் பெறப்பட்டிருந்தது. 1974 ஆம் ஆண்டு தொடக்கம் 1979 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் இந்தியாவுக்காக விளையாடியிருந்த பட்டேல் 31 போட்டிகளில் பங்கேற்று 47 இன்னிங்சுகளில் இந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

மேலும், திக்வெல்ல விளையாடிய 50 இன்னிங்சுகளிலும் 11 அரைச் சதங்கள், 2 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 1,677 ஓட்டங்களினை குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் பாகிஸ்தானுடன் ஆரம்பமாகவுள்ள தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டுள்ள திக்வெல்ல, இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேல் ஆரம்ப இணைப்பாட்டம் பெற்ற முதலாவது ஜோடியாக தனுஷ்க குணத்திலக்கவுடன் சேர்ந்து புதிய பதிவை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க