விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான பளுதூக்கல் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா, மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதன்மூலம் இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்துக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
நுவரெலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள்
சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக்….
44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டிகள் பொலன்னறுவை விளையாட்டுத் தொகுதியின் உள்ளக அரங்கில் இம்மாதம் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்களாக நடைபெற்றன.
இதில் போட்டிகளின் இரண்டாவது நாளில் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப்பிரிவில் ஸ்னெட்ச் (76 கிலோ கிராம்), க்ளீன் அண்ட் ஜேர்க் (97 கிலோ கிராம்) மற்றும் ஒட்டுமொத்த (173 கிலோ கிராம்) எடை ஆகிய மூன்றிலும் ஆஷிகா புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினார்.
இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஸ்னெட்ச் (74 கிலோ கிராம்), க்ளீன் அண்ட் ஜேர்க் (96 கிலோ கிராம்) மற்றும் ஒட்டுமொத்தமாக (170 கிலோ கிராம்) நிலைநாட்டிய தனது சொந்த தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.
அத்துடன், ஆஷிகாவினால் நிலைநாட்டப்பட்ட இந்த மூன்று தேசிய சாதனைகளும் குறித்த எடைப்பிரிவில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளுக்கான புதிய தேசிய சாதனையாகவும் பதிவாகின.
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கலில் தனது முந்தைய சாதனையை சமப்படுத்தியிருந்த ஆஷிகா, வட மாகாணத்தின் சிறந்த பளுதூக்கும் பாடசாலை வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், பெண்களுக்கான 58 கிலோ கிராம் எடைப்பிரிவில் கலந்துகொண்ட வேம்படி மகளிர் உயர்நிலைப் பாடசாலையைச் சேர்ந்த பிரதாபன் நிலோஜினி, வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவர் ஸ்னெச் முறையில் 53 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 67 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தமாக 120 கிலோ எடையுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த காலங்களில் தேசிய மட்ட கனிஷ்ட பளுதூக்கல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மேரி லக்ஷிகா, பெண்களுக்கான 90 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.
குறித்த போட்டியில் ஸ்னெட்ச் முறையில் 44 கிலோ கிராம் மற்றும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 56 கிலோ கிராம் உள்ளடங்கலாக 100 கிலோ கிராம் எடையைத் தூக்கி அவர் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, இம்முறை போட்டித் தொடரில் ஆறு புதிய தேசிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் இரண்டு…..
இதில் ஆண்களுக்கான 85 கிலோ கிராம் எடைப்பிரிவில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சின்தன கீதால் விதானகேவும், 62 கிலோ கிராம் எடைப் பிரிவில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த திலங்க பலகசிங்கவும் புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினர்.
இதேநேரம், பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப்பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த தினூஷா கோமஸ், பெண்களுக்கான 90 கிலோ கிராம் எடைப்பிரிவில் தென் மாகாணத்தைச் சேர்ந்த பி.சி பிரியன்தி மற்றும் 90 கிலோ கிராம் மேற்பட்ட எடைப்பிரிவில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஜே. ஹபுதென்ன ஆகிய வீராங்கனைகள் புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இதேவேளை, ஆண்கள் பிரிவில் வட மத்திய மாகாணத்தின் திலங்க பலகசிங்கவும், பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த தினூஷா கோமாஸும் அதி சிறந்த வீரர்களாகத் தெரிவாகினார்.
அத்துடன், ஆண்கள் அணி நிலை பிரிவில் வட மத்திய மாகாணம் சம்பியனானதுடன், மத்திய, வட மேல் மாகாணங்கள் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டன. இதேநேரம், மகளிர் அணி நிலை பிரிவில் வட மத்திய மாகாணம் சம்பியனாகியதுடன், மேல் மாகாணம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<