இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் இதுவரை காலமும் மிகப் பெரிய குறைபாடாக காணப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு இன்றைய தினம் (09) விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக இந்த செயற்கை ஓடுபாதை அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவினால் அவசர அவசரமாக எந்தவொரு நிறுவனத்திடமும் பகிரங்கமான முறையில் குத்தகை கோரப்படாமல் தயாரிக்கப்பட்டது. எனினும் தரமற்ற முறையில் ஓடுபாதை போடப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை 2013ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில், அண்மைக்காலமாக இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக விளங்கிய சுகததாஸ செயற்கை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தற்போதைய பிரதான அனுசரணையாளராகச் செயற்பட்டு வருகின்ற, உலகில் பல்வேறு பகுதிகளில் 24 முதற்தர செயற்கை ஓடுபாதைகளை அமைத்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எக்செஸ் – கொனிகா (ஜே.வி) கூட்டு நிறுனத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த செயற்கை ஓடுபாதை சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் போடப்பட்டது
இந்நிலையில், மிகவும் குறுகிய காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட சுகததாஸ செயற்கை ஓடுபாதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களின் வாக்குறுதிக்கு அமைய இன்று (09) மீண்டும் வீரர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இவ்விசேட நிகழ்விற்கு தேசிய நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் எம்.எச்.எம் பௌசி, முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மேல் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சுகதாஸ விளையாட்டரங்கின் நிர்வாக சபை உறுப்பினர்கள், மெய்வல்லுனர் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட 4×100 கண்காட்சி அஞ்சலோட்டப் போட்டியொன்று நடைபெற்ற அதேநேரம், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பரிதி வட்டத்தை எறிந்து மைதான நிகழ்ச்சிகளையும் ஆரம்பித்துவைத்தார்.
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு
பெரும்பாலான சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்…
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ”கடந்த 3 வருடங்களாக நாம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் வீரர்களிடம் கையளிப்பதற்கான நேரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் சுகததாஸ விளையாட்டரங்கின் அபிவிருத்திப் பணிகளுக்காக 660 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிய முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுகததாஸ விளையாட்டரங்கில் உள்ள செற்கை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக இரண்டு தடவைகள் குத்தகை பெறவேண்டி ஏற்பட்டதால் வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர் நோக்கியிருந்தனர்.
பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இறுதியில் இதன் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பித்து தற்போது அதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.
எனவே உலக தரத்துடன் தயாரிக்கப்பட்ட சுகததாஸ மைதான செயற்கை சுவட்டு ஓடுபாதையில் வீரர்கள் அனைவரும் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எமது வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வெல்வதற்கு இது உதவியாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான திகதி அறிவிப்பு
3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும்…
இந்நிலையில், மறுசீரமைக்கப்பட்ட சுகததாஸ செயற்கை ஓடுபாதையில் நடைபெறவுள்ள முதலாவது உள்ளுர் மெய்வல்லுனர் போட்டித் தொடராக 56ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 7 நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச போட்டித் தொடராக இடம்பெறவுள்ளது. இப்போட்டித் தொடர் எதிர்வரும் மே மாதம் 05ஆம் மற்றும் 06ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.