விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ‘‘ட்ரகன்ஸ் லீக’’ வெற்றிக்கிண்ணப் போட்டிகளில் 27 ஆவது போட்டி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. முழுமையாக 80 நிமிடங்களாக இடம்பெற்ற இப்போட்டியில், புத்தளம் மாவட்டத்தின் தலை சிறந்த கழகங்களான இளம் வீரர்களைக் கொண்ட ட்ரிபல் செவன் மற்றும் நியூ ஸ்டார் ஆகிய கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தின.
இளம் வீரர் பைக்கரின் அசத்தலான ஆட்டத்தால் அனுபவம் மிக்க ட்ரிபல் செவன் அணியை 7 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து, நியூ ஸ்டார் கழகம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஆட்டம் மழை காரணமாக சற்று தாமதித்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ரசிகர்களின் வரவு அதிகரித்தே காணப்பட்டது. ஆட்டத்தின் முதலாவது வாய்ப்பு ட்ரிபல் ன் கழகத்திற்கு கிடைக்க சக்கீன் சிறப்பாகச் செயற்பட்டு பந்தை நஸ்மினிடம் கொடுக்க, அதனை கம்பம் நோக்கி வேகமாக அடிக்க எதிரணியின் கோல் காப்பாளர் வசீம் வேகமாக வந்த பந்தை இலகுவாகப் பிடித்துக் கொண்டார்.
போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் இன்ஸாமின் சிறந்த பந்து பரிமாற்றத்தின் மூலம் நேர்த்தியாக பைக்கரின் கால்களுக்கு பரிமாற, தனிமையில் இருந்த மனாஸிரின் கைகளில் படாதவாறு கம்பத்திற்குள் வேகமாக உள்ளனுப்பி நியூ ஸ்டார் கழகம் முதலாவது கோலைப் பதிவு செய்தது.
பின்னர் 13 ஆவது நிமிடத்தில் அம்ஜத் கொடுத்த பந்தை நஸ்மின் பெற்று கோல் கம்பத்தினுள் உதைக்க பந்து கோல் காப்பாளர் வசீமின் கைகளில் பட்டவாரே கோல் கம்பங்களுக்குள் நுழைந்தது. எனினும் நடுவர் அந்த முயற்சியை ஓப்சைட் என அறிவிக்க சிறப்பான வாய்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
மேலும் ஆறு நிமிடங்கள் கழித்து பைக்கர் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து பந்தை 4 தடுப்பு வீரர்களைக் கடந்து ட்ரிபல் செவனின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று சர்ஸியிடம் பரிமாற, அதை சர்ஸி தவறவிட பந்து ட்ரிபல் செவன் தடுப்பு வீரரின் காலில்பட்டு வெளியேறியது.
2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா?
பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970…
ட்ரிபல் செவன் கழகத்தின் முன்கள வீரர்களால் கோலுக்கான பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அதை சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் அனைத்து வாய்ப்புகளும் வீணாகியது.
போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் கழகத்திற்கு கிடைத்த கோர்ணர் உதையை இர்பான் உயர்த்தி அடிக்க, அதனை உயரே எழுந்து ஹெடர் மூலம் கோலாக்க நியூ ஸ்டாரின் கோல் கணக்கு இரட்டிப்பானது.
கோல் அதிர்ச்சியிலிருந்து ட்ரிபல் செவன் வீரர்கள் மீள்வதற்குள் இரண்டு நிமிடங்கள் கழித்து மூன்று தடுப்பு வீரர்களையும் நிலைகுலையச் செய்த பைக்கர் பந்தை அத்பானிடம் கொடுக்க, அத்பான் வலக்காலால் பந்தை இன்ஸாமுக்கு பரிமாறினார். இன்சாம் கோல் காப்பாளர் அல்லாத திசையினூடக பந்தை கம்பத்திற்குள் அனுப்பி நியூ ஸ்டார் கழகத்தை 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.
போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் ஸபாக் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஸக்கீன் பெற்று கம்பங்களை நோக்கி உயர்த்தி அடிக்க, அதனை கோல் காப்பாளர் வசீம் சிறப்பான முறையில் தன் கையால் குத்தி வெளியேற்றினார்.
முதல் பாதியின் இறுதி முயற்சியாக இன்ஸாம் கொடுத்த பந்தை ஸர்சி பெற்று மனாசிரின் கைகளுக்கே அடித்து விட பந்து கையில் பட்டவாரே மைதானத்தை விட்டு வெளியேறியது. முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் நியூ ஸ்டார் மேற்கொண்ட இறுதி முயற்சி தோல்வியில் முடிந்தது.
முதல் பாதி: நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3 – 0 ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம்
முதல் பாதி முன்னிலையோடு கோல் கணக்கை அதிகரிக் வேண்டும் என்ற நோக்கில் நியூ ஸ்டார் கழகம் களமிறங்க, ட்ரிபல் செவன் கழகம் அதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் களம் கண்டது.
இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகி 6 ஆவது நிமிடத்தில் ஸர்சி கொடுத்த பந்தை இன்ஸாம் பெற்று அதனை கம்பங்களை நோக்கி உதைய நேரே வந்த பந்தை கோல் காப்பாளர் மனாஸிர் கையால் தட்டி வெளியேற்றினார்.
மீண்டும் 52 ஆவது நிமிடத்தில் ட்ரிபல் செவன் கழக வீரர் நஸ்மின் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து பந்தை கம்பங்களை நோக்கி உயர்த்தி அடிக்க, வேகமாக வந்த பந்தை நியூ ஸ்டார் அணித் தலைவர் ஹக்கீம் தலையால் முட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் பைக்கரின் கால்களில் பந்து கிடைக்க அதை மின்னல் வேகத்தில் இரண்டு தடுப்பு வீரர்களையும் கடந்து சென்று பெனால்டி பகுதிக்குள் வைத்து ஸர்சியின் கால்களுக்குச் சேர்த்தார். ஸர்சி அதனை கம்பத்தின் வலப் பக்கமாக உள்ளனுப்பினார். கோல் காப்பாளர் மனாஸிர் தடுக்க முற்படும் முன் பந்து கோல் கம்பங்களுக்குள் நுழைய நியூ ஸ்டார் கழகம் நான்காவது கோலைப் பதிவு செய்தது.
விம்பில்டன், யுனைடட் கழகங்களுக்கிடையிலான போட்டி சமநிலையில்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற..
ட்ரிபல் செவன் கழக தடுப்பு வீரர்களின் கவனக் குறைவை நியூ ஸ்டார் கழகம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. மேலும் 69 ஆவது நிமிடத்தில் ட்ரிபல் செவனிற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரிபாஸ் கம்பங்களை நோக்கி உயர்த்தி அடிக்க சிபான் உயரே எழுந்து தலையால் முட்ட முயற்சிக்க பந்து தலையில் படாமல் வெளியேறியது.
அடுத்த நிமிடமே பைக்கரின் கால்களுக்கு மீண்டும் பந்து கிடைக்க வேகமாகச் செயற்பட்ட பைக்கர் ட்ரிபல் செவனின் நான்கு வீரர்களையும் நிலைகுலையச் செய்து கம்பத்தின் இடப்பக்கத்திலிருந்து உயர்த்தி அடிக்க, உயரமாக வந்த பந்தை ஸாஜித் பாய்ந்து ஹெடர் மூலம் கம்பத்திற்குள் உள்ளனுப்பினார். பெறப்பட்ட இந்த சிறந்த கோலோடு 5 – 0 என்ற கோல்கள் கணக்கில் நியூ ஸ்டார் கழகம் முன்னிலை பெற்றது.
மேலும் 5 நிமிடங்கள் கழிந்த நிலையில் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்த பந்தை ஸாஜித் பெற்று தடுப்பு வீரர்களையும் கடந்து தனியே நின்ற பைக்கரின் கால்களுக்கு கொடுத்தார். அதை பைக்கர் துரிதமாக செயற்பட்டு கம்பத்தின் வலப்புறத்திற்கு வேகமாக உட்செலுத்த நியூ ஸ்டார் கழகத்தின் கோல் கணக்கு ஆறாகியது. இதன் மூலம் பைக்கர் இப்போட்டியில் இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார்.
ட்ரிபல் செவன் கழகத்தின் தடுப்பு வீரர்களால் பைக்கரை கட்டுப்படுத்த முடியாமல் போக ட்ரிபவ் செவன் கழகத்தின் எல்லையை இளம் வீரர் பைக்கர் முழுமையாக ஆக்கிரமித்தார்.
இரண்டாம் பாதியின் மேலதிக நேரத்தில் (81) மீண்டும் பைக்கரின் காலுக்கு பந்து கிடைக்க பந்தை கம்பத்தின் இடப்பக்கமாக உயர்த்தி அடிக்க அதனை ஸாஜித் ஹெடர் மூலம் கம்பங்களுக்குள் செலுத்தினார். ஸாஜித் போட்டியில் இரண்டாவது கோலை பதிவு செய்ய, நியூ ஸ்டார் கழகம் 7 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைய, பாரிய வெற்றி ஒன்றை நெருங்கியது.
போட்டியை நடுவர் ஜாக்கிர் முடிவுக்கு கொண்டுவர இளம் வீரர் பைக்கரின் வேகமிக்க அசத்தலான ஆட்டத்தால் ட்ரிபல் செவன் கழகத்தை 7 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வீழ்த்தி, நியூ ஸ்டார் கழகம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளோடு முதலிடம் பெற்றது.
இப்போட்டியில் பைக்கர் இரண்டு கோல்களைப் பெற்றதோடு நான்கு கோல்களுக்கு உதவியாளராகவும் காணப்பட ரசிகர்கள் பைக்கரின் பேரையே உச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 7 – 0 ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – பைக்கர் 6’ & 75’, அவ்ஸாப் 28’, இன்ஸாம் 31’, ஸர்சி 61’, ஸாஜித் 70’ & 81’
மஞ்சள் அட்டை
ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் – யூனுஸ் 14’, பஸீர் 39’