இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) தேசிய கிரிக்கெட் அணிக்கான ஐந்து பேர் அடங்கிய புதிய தேர்வாளர் குழாத்தினை இன்று (04) வெளியிட்டிருக்கின்றது. இந்த புதிய தேர்வாளர் குழாத்தினை தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் பழைய தேர்வுக் குழாத்திற்கு தலைவராக செயற்பட்ட கிரேம் லெப்ரோய் இற்கே மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
புதிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?
கிரஹம் லப்ரோய் தலைமையிலான தற்போதைய..
இதேவேளை, இந்த தேர்வுக் குழாத்தில் சுற்றுத் தொடர்களுக்கான (Tours) இலங்கை அணியினை தெரிவு செய்யும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் சுற்றுத் தொடர்களுக்கான இலங்கை அணியின் தேர்வாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குருசிங்க அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த செயற்பாடுகளுக்கான (Cricket Operation) சிரேஷ்ட உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டிருந்தோடு, கெத்தாராமையில் இருக்கும் உயர் செயற்திறன் நிலையம் மற்றும் திறன் விருத்தி நிலையம் என்பவற்றினை பராமரிக்கும் பொறுப்பினையும் பெற்றிருந்தார்.
இதனாலேயே, அவருக்கு புதிய தேர்வாளர்கள் குழாத்தில் பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதோடு, குருசிங்க தற்போது மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரேம் லப்ரோய் தவிர இலங்கை அணியின் புதிய தேர்வாளர்கள் குழாத்தில், பழைய தேர்வுக் குழாத்தில் இருந்த காமினி விக்கிரமசிங்க மற்றும் ஜெரைல் வூட்டேர்ஸ் அகியோர் தங்களது வழமையான பொறுப்புக்களில் நீடிக்கின்றனர். எனினும், இலங்கை அணியின் பழைய தேர்வுக் குழாத்தில் இருந்த கிரிக்கெட் பயிற்சியாளரான சஜித் பெர்னாந்துவினை புதிய தேர்வாளர் குழாத்தில் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எரிக் உபசந்த பிரதியீடு செய்திருக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் ஒப்படைப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் மீண்டும் நடைபெறும்..
45 வயதாகும் எரிக் உபசாந்த, சனத் ஜயசூரிய தலைமையில் இருந்த இலங்கை அணியின் தேர்வாளர் குழாத்தில் ஏற்கனவே அங்கத்துவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் இந்த புதிய தேர்வாளர்கள் குழாத்தின் பணிக்காலம், மே மாதம் 16 ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை ஒரு வருட காலத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வாளர்கள் குழாம்
- கிரேம் லப்ரோய் – தலைவர்
- காமினி விக்கிரமசிங்க – அங்கத்துவர்
- எரிக் உபசாந்த – அங்கத்துவர்
- சந்திக்க ஹதுருசிங்க – சுற்றுத் தொடர்களின் போதான தேர்வாளர்
- ஜெரைல் வூட்டேர்ஸ் – அங்கத்துவர்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<