புதிய றக்பி சீருடை அறிமுகம் செய்த மடவளை மதீனா கல்லூரி

390

கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையானது பாடசாலை றக்பி தொடரின் புதிய பருவத்திற்கான தமது உத்தியோகபூர்வ சீருடையினை (Jersey) அண்மையில் அறிமுகம் செய்தது.

WATCH – Dhananjaya de Silva இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் பதவிக்கு தகுதியானவரா? | Sports RoundUp – Epi 238

அந்தவகையில் 18 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலைகள் றக்பி அணி உபயோகம் செய்யும் புதிய சீருடை அறிமுக நிகழ்வு கடந்த வாரம் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

மடவளை மதீனா கல்லூரியின் புதிய சீருடையினை கல்லூரி அதிபர், A. அப்துர் ரஹீம் மற்றும் பாடசாலை பழைய மாணவ உறுப்பினர்களில் ஒருவரான நாஜிம் ஆகியோருடன் இணைந்து இலங்கை றக்பி அணி முன்னாள் வீரர்களில் ஒருவரான கிஷோர் ஜஹான் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மடவளை மதீனா கல்லூரியில் றக்பி விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அப்பாடசாலை பல போட்டித் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வருவதோடு, தற்போது நான்கு வயதுப் பிரிவுகளிலும் (12, 14, 16 மற்றும் 18) அணிகள் பாடசாலையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலையே அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு இடம்பெற்றிக்கின்றது.

சீருடை அறிமுக நிகழ்வு தொடர்பில் ThePapare.com இடம் கருத்து வெளியிட்ட பாடசாலையின் அதிபர் அப்துர் ரஹீம் போட்டிகளில் சாதிப்பதற்கு தமது பாடசாலை றக்பி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பாடசாலையின் றக்பி விளையாட்டு வளர்ச்சிக்கு அதிகம் பங்கு வழங்கும் பாடசாலை முன்னாள் மாணவர் பைசால் அமர்தீனுக்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

”இந்த சீருடை அறிமுக நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கும், எமது பாடசாலையின் றக்பி விளையாட்டுக்கு தொடர்ச்சியாக  உதவி வரும் அனைவருக்கும் நன்றிகள். அதிலும் குறிப்பாக பாடசாலை விளையாட்டு வளர்ச்சிக்கு உதவி வரும் பாடசாலை முன்னாள் மாணவர் பைசல் அமர்தீனையும் நினைவூட்டுகின்றேன். இந்த நிகழ்வினை வெற்றிகரமாக மாற்ற உதவிய இலங்கை முன்னாள் றக்பி வீரர் கிஷோர் ஜஹானுக்கும் நன்றிகளைத் தெரிவித்து, எமது பாடசாலை மாணவர்கள் றக்பி விளையாட்டில் சாதிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

இதேவேளை ThePapare.com இடம் சீருடை அறிமுக நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்த மடவளை மதீனா ரக்பி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சமிந்த, திறமைகள் கொண்ட இளம் வீரர்கள் உள்ள ஒரு அணியாக மடவளை மதீனாவின் றக்பி அணிகள் காணப்படுவதாக கூறியதோடு பாடசாலையின் றக்பி விளையாட்டுக்கு பங்களிப்புச் செய்யும் அனைவருக்கும் நன்றிகளை கூறியிருந்தார்.

”எமது அணி பல சிறந்த வீரர்கள் கொண்ட அணியாக இருக்கின்றது. நடைபெற்ற அண்மைய பாடசாலைப் போட்டிகளிலும் சிறந்த பதிவுகளைக் காட்டியிருந்தோம். இம்முறை பருவத்திலும் சிறந்த பதிவுகளை வெளிக்காட்டி எமது பாடசாலை அணியின் றக்பி அணியினை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது இலக்காகக் காணப்படுகின்றது.”

அதேநேரம் மடவளை மதீனா கல்லூரி இந்த வாரத்தில் இருந்து பாடசாலை ரக்பி தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகளில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<