இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

418

மிகவும் பின்தங்கியுள்ள இலங்கையின் கால்பந்து விளையாட்டை முன்னேற்றுவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

நேற்றைய (09) பாராளுமன்ற அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, இலங்கையில் பின்தங்கியுள்ள கால்பந்து விளையாட்டை முன்னேற்றுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். 

இலங்கை கால்பந்து பயிற்சி குழாமிலிருந்து சஸ்னி வெளியே, ரிஸ்கான் உள்ளே

இலங்கை கால்பந்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ”இலங்கையில் கிரிக்கெட் விளையாடுபவர்களை விட அதிகமானவர்கள் கால்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். எனினும், சர்வதேச அணிகளுக்கான தரப்படுத்தலில் நாம் 206ஆவது இடத்தில் உள்ளோம். நாம் ஆசிய மட்டத்திலும் இறுதி இடத்தில் உள்ளோம்” என்றார். 

கடந்த பல வருடங்களாக இலங்கையில் உரிய முறையில் கால்பந்து சுற்றுப் போட்டிகள் நடைபெறவில்லை என பரவலான குற்றச்சாட்டு ஒன்று இருந்து வருகின்றது. குறிப்பாக, சிறந்த திட்டங்கள் இல்லாமை மற்றும் உரிய முறையில் போட்டிகள் நடைபெறாமை என்பன கால்பந்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்ற விமர்சனமும் இருந்து வருகின்றது.   

இவ்வாறான ஒரு நிலையில், தனது உரையில் கால்பந்திற்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாம் இந்த விளையாட்டின் முன்னேற்றத்திற்காக குறுகிய, மத்திய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை செய்ய வேண்டும். அதேபோன்று, பயிற்சிகளைப் பெறுவதிலும் இலங்கையில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.  

அதேபோன்று, இலங்கையில் ஆகக் குறைந்தது அரை தொழில்முறை (Semi Professional) கால்பந்து லீக் கூட இல்லை. எனவே, நாம் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அரை தொழில்முறை மற்றும் தொழில்முறை கால்பந்து ஆகிய இரண்டு முறையையும் ஆரம்பம் செய்யவுள்ளோம். அதற்கான பயிற்சிகளையும் ஆரம்பம் செய்கின்றோம்” என்றார்.  

இலங்கையில் உரிய திட்டங்கள் இல்லாத அதேவேளை, அணுசரனையாளர்களும் இல்லாத ஒரு நிலைமை இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த 5 வருடங்களில் இதற்காக இலக்குகளைக் கொண்ட திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். 

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர்

”அடுத்த 5 வருடங்களில் இலங்கையில் கால்பந்து விளையாடும் வீரர்களின் எண்ணிக்கையை இரண்டு மில்லியனாக அதிகரிக்கவுள்ளோம். அதேபோன்று, சர்வதேச தரப்படுத்தலில் இலங்கையை குறைந்தது 150ஆவது இடத்திற்காவது கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்”. 

தற்போது, வெளிநாடுகளில் உள்ள லீக் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை மற்றும் இலங்கை வம்சாவளி வீரர்களுக்கு எமது நாட்டிற்கு வந்து, தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இலங்கையில் முதல்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள சுபர் லீக் கால்பந்து தொடரில் ஆடும் சீ ஹோக்ஸ் கால்பந்து கழக அணிக்கு பயிற்றுவிக்க ஜப்பானில் உள்ள உயர் தரத்திலான பயிற்றுவிப்பாளர் ஒருவரும் அவ்வணிக்கு விளையாடுவதற்கு ஜப்பான் நாட்டு வீரர்களும் இலங்கைக்கு வந்துள்ளனர். எனவே, இவை ஒரு மாற்றத்திற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்பதனையும் அமைச்சர் தனது உரையின்போது நினைவுபடுத்தினார். 

இலங்கையில் கால்பந்திற்காக அறிமுகம் செய்யவுள்ள மற்றொரு புதிய திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாம் எதிர்வரும் நாட்களில் Football Friday என்ற ஒரு வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். இலங்கையில் கால்பந்து அபிவிருத்திக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். உங்களுக்கு தெரியும், இலங்கையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் Cycle Sunday என்ற திட்டத்திற்கு அமைய ஞாயிற்றுக்கிழமை 4 மணி முதல் 7 மணி வரை சைக்கிள் ஓட்டத்தை மேம்படுத்த தற்போது விளையாட்டுத்துறை அமைச்சும், இலங்கை பொலிசும் இணைந்து செயற்படுகின்றது. அதேபோன்று, Football Friday கால்பந்து முன்னேற்றித்திற்கான ஒரு திட்டமாக அமையவுள்ளது. எனவே, எதிர்காலத்தில் எமக்கு கால்பந்தில் ஒரு சிறந்த நிலைக்கு செல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன்” என குறிப்பிட்டார்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<