இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் ஒரு புள்ளி அதிகரிப்புடன் தொடர்ந்தும் நான்காமிடத்தில் நீடிக்கின்ற அதேவேளை, இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னராக இருதரப்பு தொடர் ஒன்றில் ஆடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகின்றது.
இலங்கை அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க டி20 குழாம் அறிவிப்பு
இலங்கை அணியுடன் டி20 தொடரில் …..
இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெள்ளையடிப்பு வெற்றி மாத்திரமல்லாமல் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணியாகவும் புதிய பதிவை நிலைநாட்டியது. எனினும், நேற்று முன்தினம் (16) நிறைவுக்கு வந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதே தென்னாபிரிக்க அணியிடம் 5-0 என்ற அடிப்படையில் லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி வெள்ளையடிப்புக்கு உள்ளானது.
இதன் மூலம் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியினுடைய ஆதிக்கம் எவ்வாறு அமையப்போகிறது என்கின்ற சந்தேகம் இலங்கை அணி இரசிகர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய அணிகளின் இரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, ஒவ்வொரு தொடர் நிறைவிலும் அணிகள் பெறும் அடைவு மட்டங்களை கணிப்பிடும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒருநாள் அணிகளினுடைய தரவரிசையில் தென்னாபிரிக்க அணி 111 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்பட்டது. இலங்கை அணி 78 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் காணப்பட்டது.
ஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா
கேப்டவுனில் நடைபெற்ற இலங்கை அணிக்கு ….
குறித்த தொடர் நிறைவுக்குவந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 5-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியிருந்தாலும், தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசை புள்ளியில் ஒரு புள்ளி அதிகரிப்பு மட்டுமே ஏற்பட்டிருக்கின்றது. எனினும், தரவரிசை நிலைகளில் இரு அணிகளுக்கும் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆனால், தென்னாபிரிக்க அணியின் வெற்றி தரவரிசையில் அதே புள்ளியுடன் காணப்படும் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் நான்காமிடத்தில் நீடிக்கின்றது.
இலங்கை அணிக்கு தரவரிசையில் தூரம் இருக்கின்ற அணியே வெள்ளையடிப்பு செய்திருக்கின்றது என்ற அடிப்படையில், இலங்கைக்கு 2 தரவரிசை புள்ளிகள் (96) மாத்திரமே குறைவடைந்திருக்கின்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடர்ந்தும் எட்டாமிடத்திலேயே நீடிக்கின்றது. மேற்கிந்தியதீவுகள் அணியும் 76 புள்ளிகளுடன் காணப்பட்டாலும், தசம எண் அடிப்படையில் இலங்கை அணி குறித்த எட்டாமிடத்தை தக்கவைத்துள்ளது.
இதேவேளை, கடந்த புதன்கிழமையுடன் (13) இந்தியாவில் நிறைவுக்கு வந்திருந்த இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. இதன் பின்னரான அணிகளின் தவரிசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஒருநாள் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 122 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய அணி 100 தரவரிசை புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் காணப்பட்டது.
எனவே, அவுஸ்திரேலிய அணிக்கு கிடைத்த குறித்த ஒருநாள் தொடர் வெற்றியானது தரவரிசை நிலையில் அவர்களுக்கு பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தரவரிசை நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. தரவரிசை புள்ளியில் மாத்திரமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு அதிகரித்த 3 புள்ளிகளுடன் அவர்கள் தவரிசையில் ஆறாமிடத்திலிருந்து 102 புள்ளிகளுடன் காணப்பட்ட பாகிஸ்தான் அணியை பின்தள்ளி தற்போது ஐந்தாமிடத்தை பிடித்துள்ளனர். இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தாலும் தற்போது 120 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நீடிக்கின்றது.
Photo Album : Sri Lanka vs South Africa – 5th ODI
இந்நிலையில் அடுத்த ஒருநாள் தொடரானது தரவரிசையில் ஐந்தாவது, ஆறாவது இடங்களில் காணப்படுகின்ற அவுஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது.
ஒருநாள் அணிகளின் புதிய தரவரிசை
- இங்கிலாந்து – 123 புள்ளிகள்
- இந்தியா – 120 புள்ளிகள்
- நியூசிலாந்து – 112 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 112 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 103 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 102 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 90 புள்ளிகள்
- இலங்கை – 76 புள்ளிகள்
- மேற்கிந்தியதீவுகள் – 76 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 64 புள்ளிகள்
- ஜிம்பாப்வே – 52 புள்ளிகள்
- அயர்லாந்து – 43 புள்ளிகள்
- ஸ்கொட்லாந்து – 33 புள்ளிகள்
- ஐக்கிய அரபு இராச்சியம் – 15
- நேபாளம் – 15 புள்ளிகள்
- நெதர்லாந்து – 8 புள்ளிகள்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<