ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்தும் கொக்கபுரா நிறுவனம்

594
Smart-Ball
©Kookaburra Twitter

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அறிமுகமாகி வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக சிப் (chip) பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் (Microchip Smart Ball) அறிமுகமாக உள்ளன.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பந்துகளை தயாரிக்கும் கொக்கபுரா நிறுவனம் இந்த மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் இவ்வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ள பிக் பேஷ் டி-20 கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்தப் பந்தில் இருக்கின்ற சிறப்பம்சம் என்னவெனில், கிரிக்கெட் பந்துகளில் மிகவும் சிறிய அளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தப் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து செல்லும்போது அதன் வேகம், தரையில் பட்டு பௌன்சர் ஆகும்போது அதன் வேகம், பௌன்ஸருக்குப் பின் துடுப்பாட்ட வீரர்களை நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

சுழல் பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பந்து எந்தப் பக்கம் சுழலும், எந்தப் பக்கம் செல்லும் என்பதை பந்து காற்றில் சுழன்று செல்லும்போதே கண்டுபிடிக்க இயலும்.

அத்துடன், DRS முறை இருந்தாலுமே அதிலிருந்து கிடைக்கும் ஆட்டமிழப்பு குறித்த முடிவுகள் மிகவும் துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது.

எனினும், இந்த ஸ்மார்ட் பந்தினால் ஸ்டம்பில் பந்து பட்டதா, அல்லது உரசிச் சென்றதா, துடுப்பாட்ட வீரரின் கால்காப்பில் பட்டு துடுப்பு மட்டையில் பட்டதா அல்லது நேரடியாக துடுப்பு மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டதா என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

மேலும் பிடியெடுப்பொன்றில் சர்ச்சை எழுந்தால் கூட பந்து எந்த நேரத்தில் பிடிக்கப்பட்டது, தரையில் பட்டு பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என்பதையும் அறியலாம். இதன் மூலம் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்புகளுக்குத் தீர்வு காணமுடியும்.

இதேநேரம், இந்த ஸ்மார்ட் பந்துகள் பரிசோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளருமான மைக்கல் கெஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் பீட்டர் ரோச் கூறுகையில், இந்த நிறுவனமானது விளையாட்டு ஆர்வத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள பிக் பேஷ் டி-20 தொடரில் இந்தப் பந்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. 

அத்துடன், வேகம், இயக்கம் மற்றும் சக்தி போன்ற விடயங்களைப் பற்றிய தரவுகளை சேகரிக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் பந்து மிகவும் உற்சாகமான கண்டுபிடிப்பு ஆகும். இது ரசிகர்களுக்கு மாத்திரமின்றி, பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கும் நன்மைகளைத் தரும் என்று அவர் தெரிவித்தார். 

எனவே, இந்த ஸ்மார்ட் பந்துகள் முதல் கட்டமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக்  பேஷ் டி-20 போட்டியிலும், ஏனைய நாடுகளில் நடைபெறவுள்ள டி-20 தொடர்களிலும் விரைவில் அறிமுக்கப்படுத்த கொக்கபுரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<