மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ணம் புதிய வடிவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சுபர் 12 சுற்றினைக்கொண்டு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு 20 அணிகள் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
>> தலைவர் பதவியிலிருந்து விலகும் நிக்கோலஸ் பூரன்!
இந்த நான்கு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சுபர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதுடன், சுபர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இந்த இரண்டு குழுக்களிலிருந்து முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதுடன், அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெறும்.
ஏற்கனவே நடத்தப்பட்ட கடந்த இரண்டு T20 உலகக்கிண்ணங்களில் தரவரிசை மற்றும் போட்டியை நடத்தும் நாடு என 8 அணிகள் நேரடியாக T20 உலகக்கிண்ண சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றதுடன், ஏனைய நான்கு இடங்களுக்கான போட்டியில் 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடியிருந்தன. இரண்டு குழுக்களாக இந்த 8 அணிகளும் போட்டியிட்டு, குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 12 சுற்றில் இடம்பிடித்திருந்தன.
அடுத்து நடைபெறவுள்ள 2024ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள 20 அணிகளில், தற்போதைய நிலையில் 12 அணிகள் நேரடி தகுதியை பெற்றுக்கொண்டுள்ளன. அதன்படி தொடரை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா அணிகள் நேரடி தகுதியை பெற்றுக்கொண்டன.
அதுமாத்திரமின்றி நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து என முதல் 8 இடங்களை பிடித்துக்கொண்ட அணிகள் அடுத்த T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ளன.
>> LPL தொடரில் புதிய வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பா? கூறும் சமந்த டொடன்வெல!
மேற்குறிப்பிட்ட 10 அணிகளுடன் நவம்பர் 14ம் திகதி ஐசிசி T20 தரவரிசையில் அடுத்த இடங்களை பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இவ்வாறு 12 அணிகள் 2024ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஏனைய 8 இடங்களுக்கான அணிகள் பிராந்திய தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்படும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<