புதிய மாற்றங்களுடனான அணித்தெரிவு பற்றி விளக்கும் அசந்த டி மெல்

2856

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போதான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 17 பேர் அடங்கிய இலங்கை  கிரிக்கெட் குழாம் பாரிய மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  இப்படியான ஒரு நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் ThePapare.com இற்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார்.  

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது, அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கப்பட்ட சம்பவமாகும். சந்திமால் தலைமையிலான இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் மிகவும் மோசமான தோல்வியினை தழுவியதோடு, முன்னதாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரையும்  பறிகொடுத்திருந்தது.

இலங்கை அணியில் மொஹமட் சிராஸ் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு ….

தலைமைத்துவம் ஒருபுறமிருக்க தினேஷ்சந்திமால் இறுதியாக தான் விளையாடியநான்கு இன்னிங்ஸ்களிலும் வெறும் 24 ஓட்டங்களையே குவித்திருந்ததோடு, தான்விளையாடிய இறுதி ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு அரைச்சதத்தினை மாத்திரம் பெற்று மோசமாக செயற்பட்டிருந்தார்.

எனினும், இலங்கை அணியினை டெஸ்ட் போட்டிகளில் வழிநடாத்தும் போது 40.93 என்கிற துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருந்த சந்திமால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆடி மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், சந்திமால் இல்லாத நிலையில் இலங்கை அணி தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளின் போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவினால் வழிநடாத்தப்படுகின்றது.

தினேஷ் சந்திமால் அவரது வழமையான துடுப்பாட்ட பாணியினை இழந்திருப்பதால் மனரீதியான ஒரு தளர்வை எதிர்கொண்டிருக்கின்றார் என நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், அவரை நாங்கள் ஒரே அடியாக எங்களது எதிர்கால சுற்றுத் தொடர்களிலிருந்து புறக்கணித்துவிடவில்லை அவர் இன்னும் எங்களது திட்டங்களில் இருக்கின்றார். ஆனால், இப்போதைய ஓய்வு மிகவும் தேவையான ஒன்று என அசந்த டி மெல் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கியது பற்றி பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.

சந்திமாலுக்கு தற்போது நடைபெற்று வருகின்ற இலங்கையின் உள்ளூர் தொடரில் ஒரேயொரு முதல்தரப் போட்டியில் ஆடும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கின்றது. எனினும், அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்து நடாத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட உள்ளூர் போட்டிகள் பலவற்றில் ஆடி உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இணைவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் அவருக்கு காணப்படுகின்றன.

இதேநேரம், சந்திமால் போன்று இலங்கை அணியின் ஏனைய சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான  தில்ருவான் பெரேராவுக்கும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் பேசியிருந்த அசந்த டி மெல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த சில வாரங்களாக தில்ருவான் பெரேரா கணுக்கால் உபாதை ஒன்றினால் அவஸ்தைப்பட்டு வருகின்றார். இதேநேரம், அண்மைய தொடருடன் சேர்த்து ஆசிய நாடுகளிற்கு வெளியே அவரினால் சிறப்பான முறையில் செயற்பட முடியாமல் இருக்கின்றது. இதனாலேயே அவருக்கு ஓய்வு வழங்கினோம்

தில்ருவானிற்கு பதிலாக றோயல் கல்லூரியின் இடதுகை அறிமுக சுழல் வீரரான லசித் எம்புல்தெனியவிற்கு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் ஆடும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வெறும் 22 வயதேயான லசித் எம்புல்தெனிய அண்மைய அயர்லாந்து A அணியுடனான டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததோடு, 21 முதல்தரப் போட்டிகளில் ஆடி இதுவரையில் 125 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிமுக வீரரின் உள்ளடக்கம் பற்றி பேசிய அசந்த டி மெல், தென்னாபிரிக்க நிலைமைகளை நோக்கும் போது எங்களுக்கு பந்தினை அதிகம் திருப்பும்/சுழற்றும் ஒரு சுழல் வீரர் தேவையாக இருக்கின்றது. லசித் (எம்புல்தெனிய) இயற்கையாகவே பந்தினை அதிகம் சுழற்றக் கூடிய ஒருவர். அவரை (எம்புல்தெனியவை) நாங்கள் ரங்கன ஹேரத்திற்கு பிரதியீடாக எதிர்காலத்தில் உருவாக்க முனைகின்றோம். என்றார்.

இதேவேளை, திறமைமிக்க முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரோஷேன் சில்வா  ஆகியோருக்கும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் ரொஷேன் சில்வா இலங்கை அணிக்காக இடம்பெற்ற அண்மைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும், சதீர சமரவிக்ரம எந்தவொரு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கவில்லை.

பிக்பேஷ் டி20 லீக் தொடரிலிருந்து மெக்கலம் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட…

அதேநேரம், கடந்த ஆண்டு இலங்கையின் சொந்த மண்ணில் இடம்பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கெளஷால் சில்வா அண்மைக்காலங்களில் உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய காரணத்திற்காக தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளின் போதான இலங்கை அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இந்தப் பருவகாலத்திற்கான இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் ஆடியிருக்கும் கெளஷால் சில்வா அவற்றில் 79.16 என்கிற சராசரியுடன் 850 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, இந்தப் பருவகாலத்திற்கான அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினையும் இராணுவப்படை அணிக்கு எதிராக 273 ஓட்டங்களை குவித்து பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சதீர சமரவிக்ரம போன்ற வீரர்களின் நீக்கம், கெளஷால் சில்வா போன்ற வீரர்களின் உள்ளடக்கம் என்பவை தொடர்பிலும் அசந்த டி மெல் கதைத்திருந்தார்.

கெளஷாலை மீண்டும் உள்வாங்கியது எமது முன்வரிசைக்கு இன்னும் அனுபவத்தை தரும் நோக்கத்திலேயாகும். அவருக்கு முன்வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் எங்கேயும் ஆட முடியும். அதோடு இந்தப் பருவகாலத்தில் அதிக ஓட்டங்களையும் அவர் குவித்திருக்கின்றார். நாங்கள் திரிமான்ன எப்படி அவரது அனுபவத்தை கொண்டு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார் என்பதை பார்த்திருந்தோம். சதீர சமரவிக்ரம நியூசிலாந்தில் நடைபெற்ற T20 போட்டியில் எங்களை திருப்திப்படுத்த தவறியிருந்தார். இதேநேரம், சுற்றுத் தொடர் (பயிற்சி) போட்டியின் போதும் ஜொலிக்கவில்லை. அந்த வகையில் எங்களிடம் அனுபவம் கொண்ட அதிகளவிலான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதால் அவரை (சதீரவை) விடுவித்திருக்கின்றோம். “

டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அணிகளில் ஒன்றான இலங்கை தமது நாட்டுக்குள்ளேயே முதல்தரப் போட்டிகளில் ஆடும் 23 கழகங்களை கொண்டிருக்கின்றது. இதனால், இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டித்தன்மை குறைந்ததாக காணப்படுகின்றது. இப்படியான நிலைமை மாற்றப்பட வேண்டும் என இலங்கையின் முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் பாண்டித்யர்கள் கூறி வரும் போது அப்படியான மாற்றங்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை.

இரண்டு இன்னிங்சுகளிலும் இரட்டைச் சதமடித்த அஞ்செலோ பெரேரா

இலங்கையின் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ..

எனினும், தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் எதிர்பார்த்த அடைவு மட்டத்தை தராத போது உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டும் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என அசந்த டி மெல் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டிய அறிமுக வீரர்களான ஓசத பெர்னாந்து, அஞ்சலோ பெரேரா போன்ற அறிமுக வலதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஓசத பெர்னாந்து இந்தப் பருவகாலத்திற்கான உள்ளூர்  தொடரில் 1,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக இருக்கின்றதோடு அஞ்சலோ பெரேரா ஒரு முதல்தர போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதங்கள் விளாசி புதுவித சாதனை ஒன்றினை நிலைநாட்டியிருக்கின்றார்.

இந்த இரண்டு வீரர்களின் உள்ளடக்கம் பற்றி பேசிய அசந்த டி மெல் இலங்கையின் உள்ளூர் போட்டிகள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.  

இந்த அணி மோசமாக தோற்கும் போது சில இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கின்றது. ஓசத (பெர்னாந்து), அஞ்சலோ (பெரேரா) ஆகியோர் ஓட்டங்கள் குவிப்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஒன்று இருப்பது உண்மையே. ஆனால், இந்த நாட்டில் இருக்கும் ஒரேயொரு தொடரில் ஓட்டங்கள் குவிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு தராமல் இருந்தால், நாங்கள் அந்த வீரர்களுக்கான நீதியான ஒரு விடயத்தை செய்யாதது போல் ஆகிவிடும். “

இது ஒருபுறமிருக்க அண்மைக்காலமாக சிறப்பான பதிவுகளை காட்டாத தனன்ஞய டி சில்வா தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளில் உள்வாங்கப்பட்டமை ஏன் என்பதையும் அசந்த டி மெல் விளக்க தவறியிருக்கவில்லை.

தனன்ஞய (டி சில்வா) நல்ல துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறிய போதிலும், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் நான்கு பந்துவீச்சாளர்களுடன் மட்டும் விளையாடுவதால் எங்களுக்கு ஒரு (பகுதிநேர) சுழல் பந்துவீச்சாளர் அவசியம். அதனாலேயே அவர் அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போது அணியில் இன்னுமொரு பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான மிலிந்த சிறிவர்தன இருப்பதால், தனன்ஞய டி சில்வாவிற்கு இறுதி பதினொரு வீரர்களில் ஒருவராக ஆட மிகவும் போட்டித்தன்மை ஏற்படும். “

இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக உபாதைக்கு ஆளாகிய காரணத்தினால் அறிமுக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸிற்கும் இலங்கையின் டெஸ்ட் அணியில் ஆடுவதற்கான சந்தர்ப்பம் தென்னாபிரிக்க தொடரின் போது கொடுக்கப்பட்டிருக்கின்றது.  

இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் BRC அணிக்காக திறமை காட்டி வரும் 23 வயதான மொஹமட் சிராஸ், சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் இந்தப் பருவகாலத்திற்கான உள்ளூர் தொடரில் வெறும் 7 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். மேலும், இந்தப் பருவகாலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராகவும் சிராஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அதிக பணிச்சுமை காரணமாக தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரமே ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், மொஹமட் சிராஸிற்கு இலங்கை அணிக்காக தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளின் போது ஆடும் வாய்ப்பு கிடைப்பது உச்ச நிகழ்தகவில் காணப்படுகின்றது.

Photo Album – Sri Lanka Vs Australia 2nd Test – Day 1

இலங்கையின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் காயம் காரணமாக வெளியேறியிருக்கின்றனர். இதனால், மணிக்கு 130 தொடக்கம் 135 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பந்துவீசும் மொஹமட் சிராஸினை தேர்வு செய்திருக்கின்றோம். அசித பெர்னாந்துவையும் நாம் உள்ளடக்க முயன்ற போதிலும் எமது உடற்பயிற்சியாளர் கொடுத்த அறிக்கையின்படி தற்போது ஏற்பட்ட உபாதை ஒன்றினால் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான தயார் நிலையில் இல்லை. எங்களது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலின் பணிச்சுமையினையும் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதனால், அவருக்கு (சிராஸிற்கு) தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் போட்டி ஒன்றில் ஆடுவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு காணப்படுகின்றது. “  

இதேநேரம், இலங்கைதென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி டர்பன் நகரிலும், இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி  போர்ட் எலிசபத் நகரிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரினை அடுத்து இரண்டு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றிலும் ஆடுகின்றன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<