இந்திய பிரிமீயர் லீக் (IPL) போட்டிகளில் அதிரடியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதனை அடுத்து, தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடரில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
>> அவுஸ்திரேலிய அணியுடன் இணையும் டேனியல் வெட்டோரி
அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க அணி, அங்கே 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த நிலையில், இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இந்திய அணியின் T20I குழாத்திலேயே தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருக்கின்றார்.
கே.எல். ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் T20I குழாத்தில் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹிட் சர்மா, மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை IPL போட்டிகளில் திறைமைகளை வெளிப்படுத்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்களான அர்ஷதீப் சிங், உம்ரான் மலிக் போன்ற வீரர்களும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
மறுமுனையில் இந்த T20I தொடர் மூலம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் மீண்டும் இணைவதோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ரிசாப் பாண்ட் தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணியின் உப தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தப் பருவகாலத்திற்கான IPL போட்டிகளில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய போதும் வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா ஆகிய வீரர்களுக்கு இந்திய அணியின் T20I குழாத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை சுழல்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் இந்திய T20I அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டொண்ட T20I தொடர் ஜூன் மாதம் 09ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமாகவுள்ளதோடு, தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 19ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய T20I அணி
கே.எல். ராகுல் (தலைவர்), ருத்திராஜ் காய்க்வாட், இஷன் கிஷான், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிசாப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷார் பட்டேல், ரவி பிஸ்னோய், புவ்னேஸ்வர் குமார், ஹர்ஷால் படேல், ஆவேஷ் கான், அர்ஷதீப் சிங், உம்ரான் மலிக்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<