அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையின் பரிதி வட்டம் எறிதல் தேசிய வீராங்கனையான எம்மா டி சில்வா, அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழக திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 20 வயதான எம்மா டி சில்வா, பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 48.02 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
அண்மைக்காலமாக மெய்வல்லுனர் அரங்கில் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற மற்றுமொரு இளம் வீராங்கனையான எம்மா டி சில்வா, கடந்த வருடம் மே மாதம் கென்சாஸ் நகரில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 47.95 மீற்றர் தூரத்தை எறிந்து தேசிய சாதனையை முதற்தடவையாக முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேலதிக படிப்பை முன்னெடுத்து வருகின்ற எம்மா, பல்வேறு சர்வதேச போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த வருடம் ஜுன் மாதம் இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் எம்மா இலங்கை வந்திருந்தார்.
எனினும், தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் எம்மாவினால் குறித்த தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதுடன், துரதிஷ்டவசமாக ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவுமட்டத்தையும் அவரால் பூர்த்தி செய்ய முடியாது போனது. இதனால் ஆசிய சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் இழந்தார். எனினும். இப்போட்டியில் அவர் 44.16 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட பத்மா நந்தனி விஜயசேகர, தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஆனால், குறித்த சாதனையை எம்மா டி சில்வா, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் வைத்து முறியடித்திருந்தார்.