மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டினை குறிப்பாக கடின பந்து கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் (KSV), அதன் அடுத்த கட்டமாக தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரினை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கெட் விருத்திற்காக நியமனம் செய்திருக்கின்றது.
முன்னதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் புற்தரை (Turf) கிரிக்கெட் மைதானத்தினை உருவாக்கிய கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பு தற்போது முன்னாள் முதல்தரக் கிரிக்கெட் வீரரான மாலிங்க சுரப்புல்லிகேவினை இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் கிரிக்கெட் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்திருக்கின்றது.
>> பஞ்சாப் கிங்ஸிடம் போராடி தோற்றது ராஜஸ்தான்
வேகப் பந்துவீச்சாளரான மாலிங்க சுரப்புல்லிகே சுமார் 50 இற்கும் அதிகமான முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 11 வருடங்களுக்கு மேல் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதோடு கொழும்பு நாலந்த மற்றும் கண்டி தர்மராஜ கல்லூரிகளின் கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் மாலிங்க சுரப்புல்லிகே இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் (ECB) Level 2 பயிற்சியாளர் சான்றிதழ் கொண்ட ஒருவர் என்பதோடு, இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கழகத்தின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த அனுபவத்தினையும் தன்னகத்தே வைத்திருக்கின்றார்.
அத்துடன், சுரப்புல்லிகே விளையாட்டு விஞ்ஞான சிறப்பு இளமானிப் பட்டதாரி (BSc Hon. Degree in Sports Science and Coaching) என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டைமுனைக் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் இயக்குனராகவும் (Director of Cricket) மாலிங்க சுரப்புல்லிகே செயற்படவுள்ளார். இவர் தனது ஆளுகைக் காலத்தின் போது குறிப்பாக கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் கிரிக்கெட் அபிவிருத்தி செயற்திட்டங்களில் ஒன்றான வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கான EPP நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு சிறார்களின் கிரிக்கெட் விருத்திக்கு பெரும் பங்காற்றுவார் என நம்பப்படுகின்றது.
>> T20i தரவரிசையில் மஹீஷ், சரித் அதிரடி முன்னேற்றம்
தனது நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் மாலிங்க சுரப்புல்லிகே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
”சிறார் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் ஈடுபட அவர்களுக்கு அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களே ஊக்குவிக்கிறது. நான் சிறார்கள், இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டில் மேலும் வளப்படுத்தும் நோக்குடன் பணிபுரிய ஆசைப்பட்டே இங்கு (மட்டக்களப்பிற்கு) வந்துள்ளேன். இவ்வீரர்களின் இயல்பான விடாமுயற்சி, உறுதிப்பாடு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பணி நெறிமுறைகள், அணுகுமுறை, தலைமைத்துவ திறன், மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துதல், போட்டியில் மட்டுமல்ல, பொதுவாக வாழ்க்கையிலும் அவர்களுக்கு பயிற்சியாளராக இருப்பது என் கடமையாகும்.”
”விளையாட்டு வீரர்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளவும், கட்டமைக்கவும் கற்றுக்கொள்வதற்கும் தங்கள் இலக்குகளை அடைவதற்கு தாங்களே தங்களை நம்புவதும் அவசியமாகும். இதுவே என் பயிற்சியின் முழு நோக்கமும் ஆகும். அவர்களின் விளையாட்டு மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவர்களை ஊக்குவிப்பது எனது கடமையாகும். மற்றும் அவர்களின் குணாதிசயத்தை கண்டறிந்து பயிற்சி அளிப்பதே சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்.”
செய்தி உதவி – திரு. ஜெயா (கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<